பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 ⚫ போதி மாதவன்

பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் பிரம பதவி, இந்திர பதவி முதலிய பதவிகளை அவ்வக் காலத்தில் வகிப்பவர்களேயன்றி நிலையானவர்களல்லர். எவர்களும் அந்தப் பதவிகளை அடைய முடியும். மனிதர், தம் தவவலியால் தேவராகப் பிறக்கலாம்; ஆனால், முடிவில் மனிதராகப் பிறந்து, ஆசைகளை அகற்றி, நிருவாண மோட்சம் பெற்றால் தான் பிறவித்துன்பம் நீங்குமென்று அந்நூல்கள் கூறுகின்றன.

கௌதமர் தம் இறுதிப் பிறவியில் உலகில் புத்தராகத் தோன்றுவதற்குரிய காலம் வந்ததும், எந்த இடத்தில், எந்தக் குலத்தில் அவதரிக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கலானார். துஷித உலகிலிருந்த அந்தக் காலத்தில் அவருக்குப் பிரபாபாலர் என்று பெயர். பின்னால் புத்தராவதற்குரிய பண்பும் தகுதியுமுள்ளவர்களைப் போதி சத்துவர் என்றழைப்பது பௌத்த மரபு. பிரபாபால போதிசத்துவர், ஜம்பூத்வீபத்திற்கு அடிக்கடி போய்ப் பழக்கமாயிருந்த சுவர்ணபூதி யென்ற தேவனை அழைத்து, அவனிடம் விசாரித்தார். ‘தேவபுத்திரா! நீ ஜம்பூத்வீபத்திற்குப் பன்முறை போயிருக்கிறாய். எனவே, ஆங்குள்ள நகரங்கள், கிராமங்கள், மன்னர்களின் மரபுகள் முதலியவற்றையெல்லாம் நீ அறிந்திருப்பாய். போதி சத்துவர் எடுக்கவேண்டிய கடைசிப் பிறவியில், எந்தக் குடும்பத்தில் பிறக்கலாமென்பதற்கு ஆலோசனை கூறுவாய்!’ என்று கேட்டார்.

தேவன், இந்திய நாட்டிலிருந்த பல ராஜ்யங்கள், நகரங்கள், கிராமங்களைப்பற்றி யெல்லாம் விவரமாகக் கூறினான். எதிலும் பிரபாபாலரின் மனம் பற்றவில்லை. கோசலம், விரிஜி, மாவந்தி, வடமதுரை, அஸ்திநாபுரி, மிதிலை முதலிய எந்த இடமும் அவர் மனத்தைக் கவர வில்லை. தேவன், மத்திய தேசத்தின் எல்லைப்புற ராஜ்யங்களில் ஆண்டுவந்த உத்தமமான பிராமண குலத்-