பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 167

முதுமை, பிணிகளை நீக்கினால், மரணம் நீங்கும்; பிறப்பை (தோற்றத்தை) நிறுத்தினால் முதுமை, பிணிகள் நீங்கும், ‘நான்’ என்னும் தனித் தன்மையின் சுயநல மாகிய பவத்தைப் போக்கினால், பிறப்பு நீங்கும். பற்று நீங்கினால் தான் பவம் ஒழியும். பற்றுக்குக் காரணமான வேட்கை அழிந்தால், பற்றும் ஒழிந்து விடும். தவறான நுகர்வினாலேயே வேட்கை உண்டாவதால், நுகர்வை ஒழிக்கவேண்டும். அதனால் வேட்கை ஒழியும். உலகப் பொருள்களோடு ஏற்படும் தொடர்பால் தோன்றும் நுகர்வு ஒழியவேண்டுமானால், ஆறுவாயில்களாகிய பொறிகளின் மூலம் ஏற்படும் மயக்கங்கள் நீங்கவேண்டும். அருவுரு ஆகிய நாம ரூபங்கள் ஒழிந்தால் தான் ஆறு பொறிகளும் வெளிப் பொருள்களோடு கொள்ளும் தொடர்பு (ஊறு) அற்றுப் போய் அடங்கிவிடும். அருவுரு ஒழிய உணர்வு நீங்க வேண்டும். செய்கைகளாகிய ஸம்ஸ்காரங்கள் நீங்கினால் தான் உணர்வு நீங்கும். ஆகவே செய்கைகள் நீங்க முதற்கண் பேதமையை ஒழிக்க வேண்டும். பேதமை ஒழியும் போது அதனுள் அடங்கிக்கிடந்த நுண்மையான தேட்டக் கருக்கள்–அவாவின் ரேகைகள்–சக்தியின்றிப் போகின்றன.

ஆதலால் ஆசையை அடியுடன் துறக்கவேண்டும். ஆசை அகன்றால், அறியாமை அகலும். அதனால் செய்கைகள் ஒழியும். செய்கைகள் ஒழியவே, உணர்வு நீங்கும். உணர்வு நீங்கினால், அருவுரு நீங்கும். அருவுரு நீங்கினால், ஆறு வாயில்களும் நீங்கும். வாயில்கள் ‘செயற்படாத போது, ஊறு ஒழியும். ஊறு ஒழிந்தால், நுகர்வு இல்லாமற் போகும். நுகற்வு நின்றுபோன இடத்தில் வேட்கையில்லை வேட்கை நீங்கவே பற்றும் ஒழிகின்றது. பற்றற்ற இடத்தில் கருமங்ககளின் தொகுதி யாகிய பவம் தோன்ற முடியாது. பவம் இல்லாது ஒழியும்போது, தோற்றமாகிய பிறப்பில்லை, வினைப்