பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 ⚫ போதி மாதவன்

முதற் சீடர்கள்

அந்த நிலையில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த செல்வம் மிகுந்த திரிபுஷன், பல்லிகன் என்ற இருவர்த் தகரும் போதியடியில் ஒளி மயமாக விளங்கிக்கொண்டிருந்த சுகதரைக்[1] கண்டனர். அவர்கள் வடக்கு உத்கல[2] நாட்டினர். ஐந்நூறு வண்டிகளில் சரக்குக்கள் ஏற்றிக் கொண்டு சென்ற பாதையில், அவர்கள் ததாகதரைத் தரிசித்து, தேனும், சக்கரையும், நெய்யும் அளித்து வணங்கினர். அவரும் அவைகளை அன்போடு பெற்றுக் கொண்டு உண்டார். போதியடைந்த பின்பு அவர் உட்கொண்ட முதல் உணவுகள் அவையே.

புத்தர் அவர்களுக்கு நிருவாண முக்தியை அடையும் மார்க்கத்தை உபதேசித்தார். அவர்களும் அவரிடம் முழு நம்பிக்கைகொண்டு, அவரையும் தருமத்தையும் சரணாலயமாக ஏற்றுக்கொண்டனர். இல்லறத்தில் இருந்து கொண்டு புத்தருக்கு முதன் முதல் சீடர்களாகச் சேர்ந்தவர்கள் அந்த இருவர்களே.

பிரும்மாவின் வேண்டுகோள்

உலகில் மக்கள் அடையும் துக்கங்களைக் கண்டு புத்தரின் மனம் உருகிக்கொண்டிருந்தது. தாம் பெற்ற இன்பத்தை அவர்களும் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காகவே அவர் ஆதியில் சபதம் செய்துகொண்டு நாடு விட்டுக் காடு அடைந்ததை எண்ணினார். ஆனால் ஜனங்கள் அவருடைய அமுத


  1. சுகதர்- நல்ல ஞானம் பெற்றவர்.
  2. வடக்கு உத்கலம்–வடக்கு ஒரிஸா.