பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 175

‘தங்களைத் தாங்களே வெற்றி கொண்டு, அகங்காரத்தால் வரும் உணர்ச்சிகளை அடக்குவோர் அனைவரும் சினேந்திரர்களே. மனத்தை அடக்கிப் பாவத்திலிருந்து விலகியவர்களே வெற்றியாளர்கள். ஆதலால் உபாக, நான் ஒரு சினேந்திரனே!’ என்றார் வள்ளலும்.

‘தங்களுடைய குரு யாரோ?’

‘நான் யாவற்றையும் வென்றவன்; நான் யாவற்றையும் அறிந்தவன்; வாழ்வின் நிலைகள் யாவற்றிலும் நான் ஒட்டுப் பற்றில்லாதவன். எல்லாவற்றையும் நான் துறந்தாயிற்று; அவாவை அழித்ததால் நான் முக்தியடைந்தவன். எல்லாவற்றையும் நானே கற்றுக் கொண்டபின், எவரை என் குரு என்று காட்டுவேன்?’[1]

உபாகர் தலையை அசைத்துக் கொண்டு, ‘புனித கௌதமரே! நீர் செல்ல வேண்டிய வழி அதோ இருக்கிறது!’ என்று புனித மூர்த்திக்கு, வழி காட்டி விட்டுத் தாம் தம் வழியே சென்றார். போகும் வழியிலே சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் சற்று நின்று ததாகதரின் புதிய தருமத்தைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டே சென்றார்.

ததாகதரும், மெல்ல மெல்ல நடந்து, கங்கையைக் கடந்து, காசிமா நகரை அடைந்தார்.


  1. தம்மபதம், 353-வது சூத்திரம்.