பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 ⚫ போதி மாதவன்

ஆசிரியரே தவறு செய்வதாகத் தெரிந்தால், அவரைக் கண்டித்து ஒதுக்கிவிட்டுத் தமது இலட்சியத்தை அடைய வேண்டும் என்று பிடிவாதத்துடன் தவம் புரிந்த தவசிகள் அல்லவா அவர்கள்! உண்மையை உணர்ந்து கொண்டால், அவர்கள் தமக்கும், தமது தருமத்திற்கும் உறுதுணையாக விளங்குவார்கள் என்று பெருமான் எண்ணியது முற்றிலும் பொருத்தமே!

உடலிலிருந்து ஒளிவீசிய வண்ணம் போதிவேந்தர், ஒரு கையிலே திருவோடும், மறுகையிலே ஒரு தண்டும் ஏந்திப் புன்னகை செய்து கொண்டே, மெல்ல மெல்ல நடந்து, மான் சோலையில் அமைந்திருந்த அவர்களுடைய தவப்பள்ளியுள் நுழைந்தார். அதுவரை ஐவரும் எழுந்திருக்கவேயில்லை. ஆனால், விரைவிலே அவர்கள் சித்தம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அவரை வணங்கி உபசரிப்பதில் போட்டியிட்டனர். ஒருவர் அவருடைய கழி யையும், திருவோட்டையும் வாங்கி வைத்தார்; ஒருவர் அவருடைய திருப்பாதங்களைச் சுத்தி செய்ய நீர் அணிவித்தார்; மற்றவர்கள் ஆசனம் அமைத்தும், உடைகள் எடுத்துவந்தும் மரியாதை செய்தனர். அவர்களால் வேறு முறையில் நடந்து கொள்ள முடியவில்லை. ‘ஐய, தங்கள் உடல் நலம் எப்படியுளது?’ என்று அவர்கள் கேட்டனர்.

புத்தர், ‘எல்லாம் நலமே! எல்லா விதத்திலும் நாம் நன்மையை அடைந்துள்ளோம்– அடைதற்கு அரிதான ஞானத்தை அடைந்தாயிற்று!’ என்றார். பின்னும் அவர் சீடர்களை நோக்கி, ‘ஆனால் நீங்கள் ததாகதரைப் பெயர் சொல்லியோ, நண்பர் என்றோ அழைத்தல் தகாது; ஏனெனில் அவர் புத்தர்; போதியடைந்த புனிதர்! புத்தர் எல்லா உயிர்களிடத்தும் ஒரே தகைமையான அன்புடன் விளங்குவதால், அவர் அனைவர்க்கும் தந்தையாக விளங்குகின்றார். தந்தையை இழிவுபடுத்தல் தகாது. அவரை வெறுத்தல் பாவம்!’ என்று கூறினார்.