பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ⚫ போதி மாதவன்

ஒன்றில் தண்ணிரும் மற்றதில் வெந்நீரும் ஒடிக்கொண்டிருந்தது. அவைகளில் போதிசத்துவரைப் புனித நீராட்டினர். தானே ஒளிவீசிக் கொண்டிருந்த குழந்தையின் மீது கதிரொளிபடாமல் தேவர்கள் தங்கப் பிடியுள்ள வெண்கொற்றக் குடை பிடித்து நின்றனர். சிலர் சாமரை கொண்டு விசிறினர். தேவர்கள் மலர்மாரி பொழிந்து கொண்டேயிருந்தனர்.

மன்னர்க்குப்பின் மாநிலமாள ஒப்பற்ற ஒரு மைந்தன் பிறந்தான் என்ற செய்தியை உலும்பினி வனத்திலே கேட்டறிந்த மதிமந்திரி மகாநாமர் விரைந்து சென்று மகாராஜாவிடம் சோபனச் செய்தியைத் தெரிவித்தார். மட்டற்ற மகிழ்ச்சியால், மன்னர் அவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தெரியாமல் தயங்கினார். மகாநர்மர், ‘எங்கள் இளவரசருக்கு இடைவிடாமல் தொண்டு செய்யும் பாக்கியத்தை அளிப்பதே எங்களுக்கேற்ற பரிசு’ என்றார். இருவரும் உடனே பரிவாரங் களுடன் உலும்பினி நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

வழியில் சுத்தோதனர் தம் அமைச்சரை நோக்க, இந்தக் குழந்தை பிறந்ததில் ஏற்பட்டுள்ள அற்புதங்களை யெல்லாம் கவனிக்கும்போது, இன்பமடைவதா, துக்கப்படுவதா என்று என் உள்ளம் துளங்குகின்றது!’ என்று கூறினார். உடனே மகாநாமர் அவருக்கு வேண்டிய பல ஆறுதல் மொழிகள் கூறினார். முன்னால் பல பெரியார்கள் தோன்றும்போது பல அற்புத தருமங்கள் ஏற்பட்டதை எடுத்துக் காட்டி மன்னரின் கவலையை மாற்றினார். மறும்பினி வந்ததும், அவர்கள் அதனுள்ளே சென்று ஒரு புறமாக ஒதுங்கி நின்று, மன்னர் குழந்தையைப் பார்க்க வந்திருப்பதாக மகாராணிக்குச் செய்தியனுப்பினர். மகாராணியும் மன்னர் அப்போதே வரலாமென்று சொல்லியனுப்பினாள்.