பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 247

தான் கொலைசெய்து கொள்கிறான்; அநீதி செய்யும் நீதிபதி தனக்கே அநீதி இழைத்துக் கொள்கிறான்; திருடரும் தீயோரும் பறிக்கும் பொருளைத் திரும்பக் கட்டியே தீரவேண்டும். கரும விதியைக் கடந்து செல்ல முடியாது!

துக்கம் எங்கிருந்து வருகிறதென்பதை அறிந்து, பழைய தீமைகளுக்குப் பரிகாரம் செய்து, ஆசாபாசங்களையும் அசத்தியங்களையும் களைந்தெறிந்து, துன்பத்தைப் பொறுமையுடன் தாங்கி, இன்னா செய்தவர்களுக்கும் இனிய வற்றையே செய்து, வாழ்க்கைப் பற்றை வேருடன் களைந்து விட்டால், பின்னால் பிறப்புமில்லை, இறப்புமில்லை! அந்நிலையே நிருவாணம்!

‘துக்கத்தை உணருங்கள்! துக்க உற்பத்தி எங்கே என்று காணுங்கள்! துக்க நீக்கம் அவசியம் என்பதை அறியுங்கள்! அதற்கு உரிய வழியை நன்கு கடைப்பிடியுங்கள்!

இதுவே நான் கூறும் எட்டுப்படிகளுள்ள அறவழி:

‘காட்சியைத் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்; ‘நான்கு வாய்மைகளையும் உணர்ந்து, பாவபுண்ணியங்களைப் பகுத்து அறியுங்கள். அறத்திற்கு அஞ்சுங்கள்; கருமத்தைக் கவனியுங்கள். இதுவே நற்காட்சி!

‘அவாவை அறுத்து, வெறுப்பு, வெகுளி, கொடுமை முதலியவற்றை நீக்கி, எல்லா உயிர் களிடத்தும் அன்பு கொண்டு வாழுங்கள். இதுவே நல்ல சங்கற்பம், நல்லூற்றம்!