பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 251

அனைவர்க்கும் உணவளிக்க எனக்குச் சக்தி இல்லையா?’ என்று கேட்டார்.

‘இது என் குல மரபு!’ என்றார் புத்தர்.

‘இது எவ்வாறு மரபாகும்? நீர் உதித்த இராஜ வமிசத்திலே, ஒரு மன்னர்கூட உணவுப் பிச்சை எடுத்ததில்லையே!’ என்று மன்னர் மீண்டும் கூறினார்.

‘பேரரசே! தாங்களும், தங்கள் குலத்தினரும் அரசர்களின் வமிசம் என்று கூறிக்கொள்ளலாம்; என் வமிசம் தொன்று தொட்டுத் தோன்றிவந்துள்ள புத்தர்களுடைய வமிசம். அவர்கள் உணவுக்காகப் பிச்சையெடுத்தே வாழ்ந்து வாழ்ந்தனர்!’ என்று பகவர் மறுமொழி புகன்றார்.

அத்துடன் தாம் தவத்தால் கண்டெடுத்த புதையலைத் தந்தையார்க்கும் அளிக்க விரும்புவதாய்க் கூறி, அண்ணல் அவருக்குத் தனியாக அறவுரை புகன்றார்: ‘கனவுகளைக் கைவிட்டு, உள்ளத்தை உண்மைக்காக திறந்து வையுங்கள்! அற ஒழுக்கத்தைக் கையாண்டு நிலையான இன்பத்தை, அடையுங்கள்!’ என்று கேட்டுக் கொண்டார்.

மன்னர் அவர் கையிலிருந்த திருவோட்டைத் தம் கையிலே வாங்கி வைத்துக்கொண்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அன்று புத்தருக்கும் பிக்குக்களுக்கும் அங்கேயே அமுது படைக்கப் பெற்றது. பின்னர் புத்தருடைய உபதேசத்தால் சுத்தோதனர், ‘சோதாபத்தி’ என்ற நிர்வாண வழியின் முதற்படியை அடைந்தார். அன்றே நியக்குரோத வனத்தைச் சங்கத்திற்கு அளிப்பதாக மன்னர் புத்தர் கையில் புனித நீர் ஊற்றி அர்ப்பணம் செய்து கொடுத்தார்.