பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 259

திருமணம் நடந்தது; அதே நன்னாளில் அவனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டப்பெற்றது நாட்டை ஆள்வதற்கும், தமக்குப் பின்பு தமது வமிசத்தின் பெயரைப் புகழுடன் நிலை நிறுத்தவும், சுத்தோதனர் அவனையே நம்பிக் கொண்டிருந்தார். புத்தர் அவனையும் பிக்குவாகச் செய்து, சங்கத்தில் சேர்த்துக் கொண்டு விட்டார்.[1]

இளங்குமரனான இராகுலனும், நந்தனும் துறவிகளாகி விட்டதில் சுத்தோதனர் அடைந்த வருத்தத்திற்கு அளவேயில்லை. ஆயினும் புத்தருக்கு எதிராக அவர் எதையும் செய்ய இயலாதவராயும் இருந்தார். எனவே அவர் போதி வேந்தரைக் கண்டு, ‘இனியாவது இளைஞர்களைப் பெற்றோருடைய சம்மதமில்லாமல் சங்கத்திலே சேர்க்காமலிருக்க வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார். ஐயனும் உடனே அதற்கு இசைந்தார்.

ஆனந்தன்

அரச குலத்தைச் சேர்ந்தவர்களில் அடுத்தாற்போல் பௌத்த தருமத்தை ஏற்றுக்கொண்டு பிக்குவானவர்களிலே முதன்மையானவன் ஆனந்தன்.[2] அவன் சுத்தோதனருடைய தம்பி அமிர்தோதனருடைய குமாரன். அவன் புத்தருடைய பிரதமசீடனாவான் என்று குழந்தைப் பருவத்திலேயே சோதிடர் கூறியிருந்தனர். ஆகவே புத்தர்


  1. நந்தன் பிக்குவான விவரத்தை அடுத்த இயலில் காண்க.
  2. ஆனந்தன் சுக்கிலோதனருடைய புதல்வன் என்றும், அவனும் தேவதத்தனும் உடன் பிறந்த சகோதரர்கள் என்றும் சில வரலாறுகள் கூறும். டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் இவ்வாறே குறித்துள்ளார்கள்.–'புத்தர் சரித்திரம்’