பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 ⚫ போதி மாதவன்

தலைநகருக்கு வந்திருந்த சமயத்தில், அமிர்தோதனர் ஆனந்தனைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார்.

ஆயினும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளையும், மங்கையர்களிடமிருந்து, கணவர்களையும், குடும்பங்களிலிருந்து தலைவர்களையும் பிரிப்பதற்காகவே அவதரித்துள்ள புத்தர் பிரான் ஆனந்தனை விடவில்லை. ஒரு நாள் அமிர்தோதனருடைய மாளிகையின் தாழ்வாரத்திற்குப் போய் அவர் அங்கே அமர்ந்து கொண்டார். அவ்வமயத்தில் அவர்களைப்போடிருந்ததைத் தன் அறையிலிருந்து கண்ட ஆனந்தன், மெதுவாக வெளியே வந்து, ஒரு விசிறியைக் கொணர்ந்து ஐயன் அருகில் நின்று விசிற ஆரம்பித்தான். காந்தத்தைக் கண்ட இரும்பு போல் அவன் உள்ளம் பகவர்பால் சென்று விட்டது, சோதிடர் சொல்லியிருந்த கூற்று மெய்யாகி விட்டது!

பகவர் அவனுக்கு உபதேசம் செய்தார். அவர் புறப்பட்டுச் செல்லும் போது ஆனந்தனும் கூடவே புறப்பட்டு விட்டான். அப்போது மாளிகைக்கு வெளியே வந்த அமிர்தோதனர் ஆனந்தனை அழைத்தார் அவன் திரும்ப மனமின்றித் தயங்கினான்; தான் துறவு பூணுவதற்கு அனுமதி வேண்டினான். அமிர்தோதனர் முதலில் மறுத்த தாயும் பின்னால் தமது சகோதரர் சுத்தோதன மன்னரின் ஆலோசனையின் பேரில், மனமுவந்து அனுமதியளித்த தாயும் ஒரு கதை உண்டு. சுத்தோதனர், ‘நாம் அனுமதி கொடுக்காவிட்டாலும் நம் பிள்ளைகள் துறவிகளாவது நிச்சயம்; அவர்கள் தந்தையின் சொல்லைத் தட்டியவர்கள் என்று பெயர் வராமல், நாமாகவே அனுமதியளித்து விடுதல் நலம்!’ என்று கூறினாராம்.