பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தன் ⚫ 275

நேரத்தில் அவள் என்ன செய்வதென்று தோன்றாமல், எழுவதும், அமர்வதும், அழுவதும், அரற்றுவதுமாகித் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டும், முகத்தை நகங்களால் பிராண்டிக் கொண்டும் கோரமாகக் குமுறிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய துயரங்களைக் கண்டு ஆற்றாத சேடியர் பலரும் அவளைச் சுற்றி அமர்ந்துகொண்டு, எத்தனையோ ஆறுதல் மொழிகள் கூறினார்கள். எதுவும் அவளது செவியில் ஏறவில்லை. விஷமுண்ட பாணம் நெஞ்சிலே பாய்ந்த பெண் யானைபோல அவள் பிளிறிக் கொண்டிருந்தாள்.

வயது முதிர்ந்த சேடி ஒருத்தி அவளுடைய நிலையைத் தெளிவிக்க விரும்பி, அண்டையிலே சென்று பேச ஆரம்பித்தாள். ‘அரச குலத்தில் உதித்த ஒரு ஞானியின் நாயகி நீ! உனது நாயகர் தருமத்தை மேற்கொண்டதற்காக நீ இப்படித் துயரப்படுதல் சரியன்று. உங்களுடைய இட்சுவாகு வமிசத்திலே துறவு பூண்டு பெருந்தவம் செய்யும் வழக்கம் இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமன்று. வீரச் சாக்கியர்கள் துறவு பூண்டால், அவர்களுடைய மனைவியர் கற்பே தங்கள் குலதனம் என்று காத்துப் போற்றி வருவார்கள். நீ அழுவதற்குச் சிறிதும் நியாயமேயில்லை. நந்தர் வேறொரு பெண்ணை இச்சித்துச் சென்றால், நீ அழலாம். துறவியாயிருக்கும்போது அவர் உறுதிகுலைந்து ஓடிவந்து விட்டாலும், நீ உட்கார்ந்து அழவேண்டியது தான். ஏனென்றால் நல்ல குடும்பத்திலே தோன்றிய நங்கைக்கு அதைவிட துக்கம் வேறில்லை! நல்லது நடந்து விட்டால், நாம் மனத்தைத் தேற்றிக் கொண்டு களிப்புற வேண்டுமே அன்றிக் கவலைப்பட்டு அழ வேண்டியதில்லை!’ என்று ஆணித்தரமான உண்மைகளை அவள் எடுத்துக் காட்டினாள்.