பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312 ⚫ போதி மாதவன்

அறவுரைகள் புகன்று வந்தார். ஏராளமான ஜனங்கள் அவருடைய தருமத்தை ஏற்றுக்கொண்டனர். பின்னும் ஐயன், அரண்மனைக்குச் சென்று, அரசனுக்கும் தரும உபதேசம் செய்தார், அவ்வுபதேசம் ‘இரத்தின சூத்திரம்’ எனப்படும்.

சாக்கியர் - கோலியர் பகைமை

போதி வேந்தர் மகாவனத்தில் தங்கியிருக்கையில், கபிலவாஸ்துவிலிருந்த சாக்கியர்களுக்கும் பக்கத்து நாட்டாராகிய கோலியருக்கும் கடுமையான பகை முற்றிச் சண்டை விளைந்து விட்டது. இரு நாடுகளுக்குமிடையில் ஓடிக் கொண்டிருந்த உரோகிணி ஆற்றில் நீர் வற்றி யிருந்ததால், சாக்கியர்கள் அந்த நீரில் தங்களுக்கே உரிமையுண்டு என்று கூறி, ஆற்று நீர் முழுவதையும் அணையிட்டுத் தடுத்துத் தங்கள் நிலங்களுக்கே பாய்ச்ச ஆரம்பித்தனர். கோலியர்கள் அதை எதிர்த்து, நீர் அனைத்தையும் தாங்களே கொண்டு செல்ல முயன்றனர். இதனால் இரு திறத்தாருக்கும் விரோதம் வளர்ந்தது. ஒருநாள் இருகட்சிகளையும் சேர்ந்த வீரர்களும் விவசாயிகளும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பெருங் கூட்டங்களாக ஆற்றின் கரையிலே கூடிப் போராடத் தயாராக நின்றனர். அவர்கள் வெறி கொண்டு செல்வதை அறிந்த இருபக்கத்து அரசர்களும் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் போரைத் தவிர்ப்பதற்குத் தங்களால் இயன்றவரை சொல்லிப் பார்த்தும் பயன் படவில்லை. எனவே சிறிது நேரத்தில் உரோகிணி ஆற்றில் உதிர வெள்ளம் பாயும் நிலைமை ஏற்பட்டிருந்தது.

அந்நிலையில் புத்தர் பெருமான் திடீரென்று அங்குத் தோன்றி, இருதிறத்தாரையும் சமாதானப்படுத்தினார். சில அரிய உபதேசக் கதைகளைக் கூறி, ஐயன்