பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 313

‘மன்னர்களைப் பார்க்கினும் மண் மேம்பட்டதா?’ என்று கேட்டார்; ‘தண்ணீரைப் பார்க்கினும் மனித இரத்தம் மலிவான பொருளா?’ என்று வினவினார். ஜனங்கள் ‘இல்லை’ என்றனர். அவர்கள் தங்கள் மன்னர்களை அவமரியாதை செய்துவிட்டுப் போராட வந்ததையும், கேவலம் நீருக்காக மானிட உதிரத்தை வெள்ளமாகப் பெருக்க நினைத்ததையும் அவர் கண்டித்து அவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டினார். அவருடைய தலையீட்டால் இருகட்சியார்களுக்கும் மனமாற்றம் ஏற்பட்டது. சாக்கியர்கள் தங்கள் குலதீபமான கருணாகரரின் சொற்படியே நடந்து, கையிலிருந்த ஆயுதங்களைத் தூர எறிந்தனர். உடனே கோலியர்களும் அவ்வாறே செய்தனர். அன்று பெருமானால் சமாதானம் ஏற்பட்டிராவிடின், ஆற்று மணலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் சண்டையில் மடிந்திருப்பர்; நடந்த விவரத்தைச் சொல்வதற்கு ஒருவன்கூட மிஞ்சியிருக்க மாட்டான்!

பெருமானின் பெருமையை உணர்ந்து சாக்கியப் பிரபுக்களில் பலரும், கோலியரில் பலரும் பௌத்த தருமத்தை மேற்கொண்டனர்.

மேலே கூறிய சண்டையைத் தவிர்ப்பதற்காகப் புத்தர் வைசாலியிலிருந்து ஆகாய மார்க்கமாக உரோகிணிக் கரைக்கு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. சமாதானத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் வைசாலிக்குத் திரும்பி, மகாவனத்திலே தங்கியிருந்தார்.

சுத்தோதனரின் மரணம்

ததாகதர் கூடாகார விகாரையிலிருந்த சமயத்திலே, கபிலவாஸ்துவில் மன்னர் சுத்தோதனர் நோயால் மிகவும்

போ –20