பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314 ⚫ போதி மாதவன்

வேதனைப்படுவதாகவும், அவருடைய அந்திம காலம் நெருங்கிவிட்டதாகவும் கேள்வியுற்று, அவர் முக்கியமான சில சீடர்களுடன் அங்கே விரைந்து சென்றார்.

அரண்மனை மாடியிலே கட்டிலில் படுத்திருந்த அரசரின் தலைமாட்டில் போதிநாதர் அமர்ந்து கொண்டு, அவருடைய தலையில் கையை வைத்து, ‘எண்ணற்ற பிறவிகளில் யான் செய்துள்ள தவங்களின் மகிமையாலும், போதிமரத்தின் அருகே நாற்பத்தொன்பது நாட்கள் நான் நோற்ற நோன்பின் பயனாலும், இந்தத் தலையில் ஏற்பட்டுள்ள வேதனை அனைத்தும் உடனே நீங்குவதாக!’ என்று கூறினார். அவ்வாறே கண் இமைப்பதற்குள் தலை வேதனை நீங்கிவிட்டது. நந்தன் மனனரின் வலது கரத்தையும், ஆனந்தர் இடது கரத்தையும், மௌத்கல்யாயனர் பாதங்களையும் தொட்டு, ‘நாங்கள் போதிமாதவரின் பாத அரவிந்தங்களைப் பின்பற்றி அடைந்துள்ள புண்ணியப் பேற்றினால் இவைகளின் வலி நீங்குவதாக!’ என்றனர். உடனே அந்த அங்கங்களிலிருந்த வேதனையும் நீங்கிவிட்டது. எனினும் மன்னர் இளைத்துக் களைப்பாகவே இருத்தார்.[1]

பின்னர் புத்தர்பிரான் தந்தையர்க்கு அற உபதேசம் செய்தார், அதைக் கேட்டுச் சுத்தோதனர் அருகத்து நிலையை அடைந்து, மெய்ஞ்ஞானம் பெற்றார். ஏழு நாட்களுக்குப் பின் அவர் ஆவி பிரியும் என்று ஐயன் கூறினார். அந்நாட்களில் அரசர் உலகப் பற்றுக்கள் எவையுமின்றிச் சாந்தி நிறைந்த சிந்தையோடு நிர்வாண முக்தியின் மகிமையை மனக் கண்ணால் கண்டு இன்புற்றிருந்தார். புத்தரின் சத்திய வார்த்தைகள் கடைசி வரை அவருக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தன.


  1. ‘The Burmese Buddha'-by Rt. Rev Brigandet