பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326 ⚫ போதி மாதவன்

தேவலோகத்தில் அன்னைக்கு உபதேசம்

பின்னர் மழைக் காலத்தில் மூன்று மாதங்கள் பெருமான் இந்திரன் வசிக்கும் திரய ஸ்திரிம்ச லோகத்திற்குச் சென்று, அங்கே தேவ உருக்கொண்டிருந்த[1] தமது அன்னை மாயாதேவிக்கும், தேவர்களுக்கும் தரும உபதேசம் செய்து கொண்டிருந்ததாகப் பழைய வரலாறுகளில் கூறப்பட்டிருக்கின்றது.

மூன்றே அடிகளில் புத்தர் வானுலகை அடைந்ததாகவும், இந்திரன் மிக்க மரியாதையுடன் வரவேற்றுத் தனது அரியாசனத்தில் அவரை அமரச் செய்து அறம் கேட்டதாகவும் கதைகள் கூறுகின்றன. பெருமான் அப்போது, ‘குஸல தர்மா, அகுஸல தர்மா, அவ்யக்த தர்மா’ என்று ஆரம்பித்து அபிதர்மத்தை ஆதியோடு அந்தமாக எண்பத்து மூன்று நாட்கள் உபதேசம் செய்தாராம். மாயாதேவி ஐயனிடம் அறம் கேட்டு அருகத்தாயினள். எத்தனையோ பிறவிகளில் என் உதரத்தில் நீ கோயில் கொண்டிருந்தாய்; பிறவி தோறும் நானே உனக்குத் தாயாக வாய்க்க வேண்டும் என்று நீ விரும்பி யிருந்தாய்; நாலும் உன்னையே மதலையாய்ப் பெற வேண்டும் என்று விரும்பி வந்தேன். உன்னைச் சுமந்து சுமந்து பெற்ற பயனை இன்று தான் பெற்றேன்!’ என்று கூறி அவள் பெருமகிழ்ச்சியடைந்தாள்.

புத்தர் வானுலகத்திற்குச் சென்றதை அறியாத மக்கள் ஆயிரக்கணக்கில் சிராவஸ்தியில் கூடியிருந்து மௌத்கல்யாயனரை விசாரித்தார்கள். அவர் அநுருத்தரைக் கேட்கச் சொன்னார். அநுருத்தர் விஷயத்தை விளக்கிச் சொன்னார். மக்கள் புத்தர் வரவை எதிர்-


  1. இந்திரன் மகளாக வளர்ந்து கொண்டிருந்ததாகவும் கூறுவர்.