பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 325

சொல்லி, அவர் சந்தன மரத்திற் செய்த அத்திரு வோட்டை வாங்கி, உடைத்தெறிந்து விட்டார். அது முதல் பிக்குக்கள் தமக்குள்ள சித்துக்களை வெளிக் காட்டாமல் அடக்கமாயிருந்தனர்.

இதை அறிந்த புறச்சமயத் தலைவர்கள் பௌத்தர்களிடம் விசேடமான எந்த ஆற்றலும் கிடையாது என்று எங்கும் பிரசாரம் செய்து வந்தனர். இதனால் ஒரு சமயம் மன்னர் பிந்துசாரர் பெருமானை நேரில் கண்டு, பிக்குக்கள் இருத்தி ஆற்றலைக் காட்டக் கூடாது என்று அவர் விதித்திருப்பதால் எதிரிகளின் கும்மாளம் தாங்க முடியாதபடி அதிகரித்து விட்டது என்று முறையிட்டார். அப்போது பெருமான், அரசரின் கட்டளை ஜனங்களுக்கே யன்றி அவனைப் பாதிக்காதது போல், தமது கட்டளை பிக்குக்களுக்கேயன்றித் தமக்கு இல்லையென்றும், இருத்தி ஆற்றல் சமய வாழ்க்கையில் மிக அற்பமான விஷயம் என்றும், அவசியம் அதைக் காண்பிக்க வேண்டுமென்றால் தாமே விரைவில் செய்து காட்டுவதாயும், வெளியே தூரத்திலுள்ள ஒரு நகரில் அதற்குத் தாமே ஏற்பாடு செய்வதாயும் கூறினார்.

சிறிது காலத்திற்குப் பின்பு சிராவஸ்தி நகருக்குப் ‘போதி வேந்தர் சென்றிருந்த சமயம், கோசல நாட்டின் பல பகுதிகளிலும் முரசறைவித்து, ஆயிரக்கணக்கான மக்களின் முன்பு அவர் தமது இருத்தி ஆற்றலைக் காட்டினார். ஒரு மாங்கொட்டையிலிருந்து திடீரென்று மாபெரும் மாமரம் ஒன்று முளைத்தெழுந்து, பூவும், காயும், பழமுமாக விளங்கும்படி அவர் செய்தார். அப்பொழுது அவர் திருமுகத்திலிருந்தும், திருவடிகளிலிருந்தும், பேரொளி தோன்றி மேலும் கீழும் பரந்து திகழ்ந்ததாம். இவைகளைக் கண்டு மக்கள் பெரு வியப்படைந்ததோடு, பௌத்த சமயத்தின் பகைவர்களும் கூடப் பிரமித்துப் போயினர்.