பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் இயல்

இளமைப் பருவம்

‘இன்பம்சார் பெரும்பாரம் ஈரைந்தும் உடனிறைந்து
கன்கன நிலைபெற்ற நாதன்.’

குழந்தையில்லையேயென்று வருந்திக் கொண்டிருந்த மன்னர் சுத்தோதனர், பெற்ற மதலையைப் பேணி வளர்ப்பதில் அதிகக் கவலை கொண்டார். சோதிட நூல் வல்லார் குழந்தையின் சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தையும் கண்டு, சாதகம் கணித்துப் பரிசீலனை செய்து, பலன்களை எடுத்துக் கூறினர். ‘மன்னரின் மைந்தன் மாநிலச் சக்கர வர்த்தியாவான், அல்லது வையகத்து உயிர்களுக்கெல்லாம் உய்யும் வழிகாட்டும் உத்தம புத்தனாவான்’ என்று அவர்கள் உறுதி சொல்லினர். உலக வாழ்வில் பற்றுக் கொண்டால், அவன் அரசர்க்கரசாக அரியாசனத்தில் அமர்ந்திருப்பான்; சமய வாழ்வில் ஏற்றுக்கொண்டால், வாழவு துறந்து போதியடைந்த புத்தனாவான்’ என்பதையும் விளக்கினர். இதனாலேயே மன்னரின் மனம் ஒரு நிலையில் நில்லாது ஏக்கமுற்று வந்தது. மைந்தன் ஒரு காலத்திலும் துறவு என்ற பெயரைக்கூடச் சிந்திக்காத முறையில் அவனைப் பாதுகாத்து வருவது எங்ஙனம் என்பதே அவர் கவலையாயிருந்தது. அரசரின் கவல்ையை மாற்ற அவரு டைய சகோதரர்களும், மற்றச் சாக்கிய குலத் தலைவர் களும் இயன்ற உதவியெல்லாம் அளித்து வந்தனர்.

சாக்கியத் தலைவர்கள் ஏராளமான பரிசுகள் கொணர்ந்து தங்கள் எதிர்காலப் பார்த்திபனுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர். பொன்னும் மணிகளும் புனைந்து செய்த நகைகள், தந்தத்திலும் தங்கத்திலும்