பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 359

‘நல்ல பொருள்களெல்லாம் நம்பிரானுக்கே உரியவை’ என்று அவர் கருதியதைக் கண்டு பெருமான் மனம் கனிந்திருந்தார். அவ்வமயம் ஜீவகர், ‘பொதுமக்கள் உவந்து அளிக்கும் உடைகளைப் பிக்குக்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்று பகவர் அனுமதியளிக்க வேண்டும். இதுவரை கிழிந்த கந்தல்களையும், பிணங்களுக்குப் போர்த்தும் துணிகளையுமே அவர்கள் அணிந்து வருகிறார்கள் இதனால் நோய்களும் ஏற்படுகின்றன’ என்று வேண்டினார். பெருமானும் அவ்வாறே அனுமதித்தார். அதைக் கேட்ட இராஜகிருக மக்கள், உடனே ஆயிரக்கணக்கான உடைகளை எடுத்துக் கொண்டு போய்ப் பிக்குக்களுக்கு அளித்தனர்.

அஜாதசத்துரு தருமத்தை ஏற்றல்

கோடை காலத்தில் ஒரு பூர்ணிமையன்று இராஜகிரு கத்தில் கோலாகலமான திரு நாள் ஒன்று நடந்தது. அன்று மாலை அஜாதசத்துரு மிக்க ஆடம்பரத்துடன் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். மந்திரிகளும் பிரபுக்களும் அவனைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அவன் தன் மனத்திற்கு ஆறுதலளிக்கும் முறையில் யாரிடமாவது போய் அறவுரைகள் கேட்டு வரவேண்டும் என்று விரும்பினான். அவன் தன் தந்தையின் உயிரைப் பலி வாங்கியதிலிருந்து மனச்சாந்தியை இழந்துவிட்டான். இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. பிம்பிசாரரின் மரணம் அவன் உள்ளத்தைப் பெரும் பாறையைப்போல் நசுக்கிக் கொண்டேயிருந்தது.

மந்திரிகளும் பிரபுக்களும் சில பெரியோர்களுடைய பெயர்களைச் சொல்லி, அவர்களைப் போய்த் தரிசித்து வரலாம் என்றனர் ஒருவர் பூர்ண காசியபர் பெரிய மத குரு என்றும், அவரைக் காண்பது நலம் என்றும் கூறினார். அரசனின் மைந்தனான உதாயிபத்ரன் ஏதாவது ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்லலாம் என்று