பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364 ⚫ போதி மாதவன்

பணியாளாகவுமே இருக்கவேண்டும் என்று உத்தரவு போடுவீர்களா?’

அஜாதசத்துரு கூறினான்: ‘பகவ, அவ்வாறு செய்ய மாட்டேன்! அவனை நான் எந்த இடத்தில் கண்டாலும், அவன் முன்பு எழுந்து நின்று என் இரு கைகளையும் கூப்பி வணங்குவேன். அவன் அந்தத் துறவு வாழ்க்கையில் ஈடு பட்டிருக்கும்வரை நான் அவனுக்கு உடைகளும், உணவும். தங்குவதற்கு இடமும், மருந்துகளும் அளித்து வருவேன்!’

‘தருமத்தை மேற்கொண்டு ஒழுகுவதில் கண் முன்பு தெரியக்கூடிய பயன் விளைகிறது என்பது இந்த உதாரணத்தின் மூலம் தெரிகிறது அல்லவா?’ என்று பெருமான் கேட்டார்.

மன்னன் திருப்தியடைந்தான். பின்னர் அவன் அவருடன் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தான். ஐயன் தருமத்தைப்பற்றி அவனுக்கு விரிவாக விளக்கி உரைத்தார்.[1]

முடிவில் அஜாதசத்துரு மனத்தெளிவுபெற்று, ‘நான் தருமத்தைச் சரணடைகிறேன்; புத்த பகவரே மெய்ஞ் ஞானி என்பதை மறுப்பதைப் பார்க்கினும் என் தலை அறுபடுவதையே நான் விரும்புவேன்; நான் சங்கத்தையும் சரணடைந்து உபாசகனாகிறேன்!’ என்று கூறினான் அவன் வெளியே சென்றபின், பெருமான், ‘இவன் இந்தப் பிறவியிலேயே அருகத்தாக விளங்கவேண்டியவன்; ஆனால் தந்தையைக் கொலை செய்த பாவம் குறுக்கே நிற்கிறது!’ என்று மொழிந்தார்.

தேவதத்தனின் முடிவு

தேவதத்தனின் துர்ப்போதனையைக் கேட்டே அஜாத சத்துரு பழைய மன்னரின் உயிரைப் போக்கினான் என்-


  1. அஜாதசத்துரு ஐயனைச் சந்தித்த இவ்வரலாறு ‘சிரமண பால சூத்திர'த்திலுள்ளது.