பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 373

பின்னர் பெருமான் இராஜகிருக நகரிலிருந்து. அடியார்கள் புடைசூழ, அம்பலத்திகா என்ற கிராமத்திற்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு, நாலந்தா கிராமத்தை அடைந்தார். நாலந்தா தருமசேநா பதியாகிய சாரீபுத்திரருடைய சொந்த ஊர். அங்கே பாவாரிகை என்ற மாந்தோப்பில் அவர் பகவருடன் தங்கி யிருந்த சமயத்தில் இருவருக்கும் நிகழ்ந்த உரையாடல் ஒன்று ‘மகா-பரி- நிருவாண சூத்திர'த்தில் குறிக்கப் பெற்றுள்ளது. உலகில் தோன்றிய புத்தர்கள் யாவரிலும் கௌ தம புத்தரே தலைசிறந்தவர் என்று சாரீபுத்திரர் தம் கருத்தைக் கூறினராம். நிகரற்ற மேதையாயும், சாத்திரக் கடலாயும், சன்மார்க்க சீலராயும் விளங்கிய தருமசேநாபதி கூட அவ்வாறு கூறியது குற்றம் என்று விமலர் எடுத்துக் காட்டினார். ஒரு வாழ்க்கையில் காணும் விஷயங்களைக் கூட முழுவதும் உய்த்துணரமுடியாத நிலையில், தொன்மையிலே தோன்றிய புத்தர்கள் அனைவரையும் பற்றி ஒருவர் ‘எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? எனவே பகவர், ‘கௌதம புத்தராகிய என்னையாவது நீ பூரணமாக அறிந்து விட்டாயா?’ என்று வினவினார். சாரீ புத்திரர் வெட்கத்தால் தலை வணங்கித் தமது பிழையை உணர்ந்து, தமது குருநாதரையே தாம் முழுதும் தெரிந்து கொள்ள வில்லை என்று ஒப்புக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு சாரீபுத்திரரைப் பற்றியோ மௌத்கல்யாயனரைப் பற்றியோ ‘மகா - பரி -நிருவாண சூத்திர’த்தில் வேறு விவரம் எதுவுமில்லை . ஆயினும் புத்ததேவரின் வலக்கரமாயும், இடக்கரமாயும் விளங்கிய இவ்விரு நண்பர்களும் அவருக்கு முன்பாகவே நிருவாணப் பேற்றை அடைந்து விட்டனர். அந்த விவரத்தை நாம் வேறு வரலாறுகளிலிருந்தே அறிய வேண்டியிருக்கிறது.

நாலந்தாவுக்கு அடுத்தாற்போல் புத்ததேவர் தங்கி யிருந்து உபதேசம் செய்த இடம் பாடலிகாமம். இது அக்காலத்தில் ‘பாடலி’ என்ற சிறு கிராமமாகவே இருந்து