பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374 ⚫ போதி மாதவன்

வந்தது. பிற்காலத்தில் பாடலிபுரம் (பாடலிபுத்திரா) என்ற பெருநகராகி, சந்திரகுப்தர், அசோகர் முதலிய சக்கரவர்த்திகளின் சாம்ராஜ்யத்திற்குத் தலைநகரமாயும் விளங்கிற்று. ‘பாடலி’ என்பது ஒரு மலரின் பெயர் என்பர்; பாடலிபுரத்திற்குக் குஸுமபுரம் (மலர் - நகர்) என்றும் பெயருண்டு. புத்தர் காலத்திலேயே பாடலியில் மகத மன்னர் அஜாதசத்துருவின் ஆணைப்படி பல அரண்கள் கட்டப்பெற்று வந்தன. விரிஜி நாட்டார் மகத நாட்டின் மீது படையெடுத்து வரக்கூடும் என்பதற்காக இவை அமைக்கப் பெற்றனவாம். எதிர் காலத்தில் பாடலி சாம்ராஜ்யத் தலைநகராக விளங்கும் என்பதைப் புத்தர் பெருமானும் அறிவித்திருந்தார்.

பாடலியில் யாத்திரிகர்கள் தங்கும் கிராம விடுதியிலேயே பெருமான் எழுந்தருளியிருக்க ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. அவருடைய விஜயத்தைக் கேள்வியுற்று அந்தப் பகுதியிலிருந்த அடியார்கள் பலரும் திரளாக வந்து குழுமியிருந்தனர். இரவில் நெடு நேரம்வரை போதிநாதர் அவர்களுக்கு அறவுரை புகன்று வந்தார். பின்னால் மகத மன்னரின் பிரதிநிதிகளாக அங்கு வேலை பார்த்து வந்து சுநீதர், வருஷகாரர் என்ற இருவரும் பெருமானை வணங்கி, அவரும் அடியார்களும் தம் அதிதிகளாக வந்து அமுது செய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவரும் அதற்கு இசைந்து ஒரு நாள் அவர்கள் அளித்த விருந்தினை ஏற்றுக்கொண்டார்.

பாடலியிலிருந்து பெருமான் யாத்திரை தொடங்கு கையில், ஏராளமான அடியார்களும், பொதுமக்களும் தொடர்ந்து சென்றனர். வழியில் கங்கை நதியைக் கடந்து அக்கரை செல்லவேண்டியிருந்தது. பெருமானுக்காகப் பல ஓடங்கள் வந்து காத்து நின்றன. ஆயினும் அவர் தமது இருத்தி ஆற்றலால் கங்கை மீது பறந்து சென்றனராம். எந்த ஓடத்தில் ஏறிச் சென்றாலும், மற்ற ஓடக்காரர்கள்