பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 375

மனம் வருந்தக்கூடிய நிலையைத் தவிர்க்கவே அவர் பறந்து சென்றனர் என்று குறிக்கப் பெற்றுளது.

அம்பபாலி

இதன் பின்னர் பெருமான் கோடிகாமம், நாதிகா என்ற கிராமங்களின் வழியாக விரிஜி நாட்டின் தலைநக ரான வைசாலியை அடைந்தார். அங்கே அம்பபாலியின்[1] மாஞ்சோலையில் அவரும் அடியார்களும் தங்கியிருந்தனர். அம்பபாலி பேரெழிலும் பெருஞ் செல்வமும் பெற்றிருந்த ஒரு கணிகை. பேரரசர்களும், இளவரசர்களும் அவளு டைய புன்னகையை எதிர்பார்த்துப் பொற்காசுகளையும் நகைகளையும் அவள் அடிகளில் வைத்துக் காத்து நிற்பது வழக்கம். பழைய மகத மன்னர் பிம்பிசாரர் மூலம் அவள் புத்த பகவரின் கருணையைப் பற்றியும் பெருமையைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள். பகவரின் அன்பு எவரையும் வசியப்படுத்தி ஆட்கொள்ளும் என்றும், அது சுயநலக் கலப்பில்லாது மன்னுயிர் அனைத்தையும் தழுவிக் கொள்ளும் நீர்மையுள்ளது என்றும், அது வற்றாத கருணை வெள்ளம் என்றும் அம்மன்னவர் விளக்கிக் கூறிய தாக ஒரு கதையுண்டு. எனவே அம்பபாலி பெருமானைக் கண் குளிரக் கண்டு வணங்கவேண்டும் என்று அவர் வரவைப் பன்னெடு நாட்களாக எதிர்பார்த்திருந்தாள். அவர் வைசாலி வந்து தனது மாஞ்சோலையிலேயே தங்கி யிருப்பதை அறிந்தவுடன், அவள் விரைவாக அங்கே சென்று அவரைத் தரிசிக்க வேண்டுமென்று தன் பணிப் பெண்களுடன் மாளிகையை விட்டுப் புறப்பட்டாள்.

மாஞ்சோலையிலே, பெருமான் பிக்குக்களின் நடுவே அமர்ந்து, கருத்துடைமையைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவருடைய உபதேசங்களிலெல்லாம்,


  1. வடமொழியில் ஆம்ரபாலி என்று பெயர்; மாய் சோலையை ஆம்ர வனம் என்பர்.