பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380 ⚫ போதி மாதவன்

கொடு–நூறாயிரம் பொன் தருகிறோம்!’ என்று வேண்டினர்

‘சீமான்களே! வைசாலி முழுவதையும் அதற்கு உட்பட்ட இராஜ்யத்தையும் கொடுத்தாலும், நான் இத்தகைய பெருமையை விட்டுக் கொடுக்க இயலாது!’ என்று கூறி விட்டுப் போய்விட்டான் அம்பபாலி.

லிச்சவிகள், நேராகச் சென்று ஐயனிருந்த அருந்தவப் பள்ளியை அடைந்தனர் தேவர்களைப் போல் அலங்காரம் செய்துகொண்டு வந்திருந்த அவர்களைச் சுட்டிக் காட்டி, ஐயன், ‘தேவர்களைப் பார்த்திராதவர்கள் இவர்களை இப்போது பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறினர் லிச்சவிகள் அவரை வணங்கிவிட்டு அருகே அமர்ந்து கொண்டனர்

பகவர் அவர்களுக்கு ஏற்ற அரிய உபதேசங்களைச் செய்தார். செல்வம், ஆபரணங்கள், மலர்மாலைகள், அழகு முதலியவை ஒழுக்கத்தின் எழிலுக்கு இணையாக மாட்டா என்பதை முதற்கண் வற்புறுத்திச் சொன்னார். வைசாலி நாடு இயற்கை வளங்கள் நிறைந்து, செழிப்பும் சாந்தியும் நிறைந்திருப்பினும், மக்கள் இன்பமாகவும் எழிலுடனும் வாழ்வதற்கு உள்ளப் பண்பாடே அவசியம் என்று கூறினார். சமயவாழ்விலும் பற்று ஏற்பட்டு விட்டால், அந்த மக்களின் புகழுக்கு ஈடில்லை என்றார். மேலும் அவர் கூறியதாவது:

‘பரிசுத்தமான ஒழுக்கத்திலிருந்து சுயமான வீரியம் பிறக்கின்றது. அதுவே அபாயங்களினின்றும் ஒருவனைக் காக்கும். நாம் பேரின்பத்திற்கு ஏறிச்செல்வதற்கு ஏற்ற ஏணிபோல் தூய ஒழுக்கம் விளங்குகின்றது........

முதலாவதாக “நான்” என்ற அகங்காரமுள்ள கருத்து ஒவ்வொன்றையும் அகற்றிவிடவேண்டும். நெருப்பை நீறு மறைத்திருப்பது போல் அகங்கார எண்ணம் ஒவ்வோர்