பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 383

திரட்டிக் கொண்டு அப்போதிருந்த நிலையில் நோயை அடக்கி, மரணத்தை வென்றுவிட்டார்.

விரைவிலே உடல் நலமடைந்து வந்தது. ஒருநாள் பெருமான் தாம் தங்கியிருந்த தவப்பள்ளிக்குப் பின்புறத்திலே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அணுக்கத் தொண்டர் ஆனந்தரும் அங்கே போய் வணங்கி விட்டு, அருகே ஓரிருக்கையில் அமர்ந்தார். அவர் பெருமான் நோயுற்று வருந்திய சமயத்தில் தாம் அடைந்த மன வேதனையை விவரித்துக் கூறி, ஐயன் நெடுநாள் வாழ்ந் திருக்க வேண்டுமென்றும், அடியார்களுக்கு மேலும் அவசியமான உபதேசங்களைச் செய்ய வேண்டு மென்றும் வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்ட பகவர், ‘ஆனந்தா, சங்கம் இன்னும் என்னிடம் என்ன தான் எதிர்பார்க்கின்றது? சாதாரண மானவர்களுக்கு என்றும், பயிற்சி பெற்ற அந்தரங்க சீடர்களுக்கு என்றும், தருமத்தில் வேற்றுமையில்லாமலே, எல்லோருக்கும் பொதுவாகவே, நான் தருமப் பிரசாரம் செய்துள்ளேன். ஆனந்தா, சில விஷயங்களைக் கூறாமல் “ஆசாரிய முஷ்டி[1]” என்று தரும சம்பந்தமாக நான் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளவில்லை!’ என்று கூறினார். சங்கத்தைத் தாமே தலைமை தாங்கி நடத்தி வர வேண்டுமென்றோ , சங்கம் தம்மையே தாரகமாகக் கொண்டதென்றோ ஒருவர் கருதினால், அவரே சங்க சம்பந்தமான சகல விதிகளையும் விதிக்க வேண்டு மென்றும், ஆனால் ததாகதரென்ற முறையில் தாம் அவ்வண்ணம் கருதவில்லையென்றும் அவர் தெளிவாக்கினார்.


  1. ஆசாரிய முஷ்டி–ஆசாரியர் வெளியிடாமல் கைப் பிடியில் மறைத்து வைத்துக் கொள்ளும் தத்துவம் (முஷ்டி–கைப்பிடி, விரல்களை முடக்கிய கை )