பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 401

ளைக்காரன் என்று அவர்கள் கருதும்படி தம் குரலை மாற்றிக் கூவிக்கொண்டே, அவர்களைக் கொலைசெய்து விட்டாராம். மரிக்கும் பொழுதும் அப்பெற்றோர்கள் மகனை நினைத்து வருந்தி, ‘மகனே, நீயாவது எங்கேனும் தப்பித்துக் கொள்!’ என்று கூறினராம். தங்களைக் கொன்றவன் தங்கள் மகனே என்பதை அவர்கள் நம்பவே யில்லை. மாதா, பிதா இருவரையும் கொலைசெய்த அந்தப் பாவத்திற்காக மௌத்கல்யாயனர் பலகாலம் வெய்ய நரகிடையே அவதியுற்று, மீண்டும் உலகில் மனிதராய்த் தோன்றி முடிவில் கொலையுண்டு மடிந்தார் என்றும், கருமவினையின் பயனாய் அவருக்கு இறுதியில் ஆற்றல் பலியாது போயிற்று என்றும் பெருமான் கூறினார்.

மௌத்கல்யாயனரின் ஞாபகார்த்தமாக வேணுவன விகாரையின் வாயிலில் ஒரு சேதியம் கட்டும்படி பெருமான் ஆணையிட்டருளினார்.

2500 ஆண்டுகட்குப் பின்னால்!

பிற்காலத்தில் சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவருடைய அஸ்திகளும் சுமார் இருபத்தைந்து நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பெற்று, இன்றும் இந்திய நாட்டில் இருந்து வருகின்றன. ஆதியில் இந்த அஸ்திகள் புகழ் பெற்ற பௌத்தத் தலமாகிய சாஞ்சியில் ஒரு ஸ்தூபத்தில் புதைத்து வைக்கப் பெற்றிருந்தன. 1850-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித் தலைமை அதிகாரியாயிருந்த தளபதி கன்னிங்ஹாம் அவைகளைக் கண் டெடுத்து, லண்டனிலுள்ள ஒரு கண்காட்சிசாலைக்கு அனுப்பிவைத்தார். இந்தியா விடுதலை பெற்றபின், தேடு தற்கரிய அச்செல்வங்கள் திரும்ப இந்நாட்டுக்கே அனுப்பப் பெற்றன.