பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414 ⚫ போதி மாதவன்

அழுதனர்; சிலர் நின்ற நிலையிலேயே தலை சாய்ந்து விழுந்து துயரத்தால் துடித்தனர்.

அழுது அரற்றித் துயரப்பட்டவர்களை அநுருத்தர் தேற்றினார். ததாகதர் பலமுறை கூறிய வாய்மைகளை எடுத்துக் காட்டி, உலகில் எதுவும் நிலையில்லை என்று தெரிந்த பின்பும் வீணாக அழவேண்டிய்தில்லை என்று அவர் கடிந்து கொண்டார்: ‘உணர்ச்சிகளை வென்றவர்கள் அவர் உபதேசித்தருளிய வாய்மையைக் கருத்திற் கொண்டு, அமைதியோடும், அடக்கத்தோடும் இருப்பார் என்று கூறினார்.

அன்றிரவு முழுவதும் அநுருத்த நம், ஆனந்தரும் பௌத்த தரும சூத்திரங்களை ஓதிக்கொண்டிருந்தனர்.

பின் நிகழ்ச்சிகள்

பின்னர் ஆனந்தர் மூலம் போதிமாதவர் மகா- பரிநிருவாண மெய்திய செய்தியை அறிந்த மல்லர்கள் நகரிலிருந்து திரள் திரளாக வந்து சேர்ந்தனர். ஏராளமான மலர்மாலைகளும் பரிமளப் பொருள்களும் கொண்டுவந்து மக்கள் அவர் திருமேனியை வணங்கினர். மல்லர்களின் தலைவர்களுடைய ஆணைப்படி நகரிலிருந்த எல்லா வாத்தியங்களும் வந்து சேர்ந்தன. வாத்தியங்களின் இசைகளும், ஆடல்களும், பாடல்களும் இடைவிடாது நிகழ்ந்து வந்தன. இவ்வாறு ஆறு நாட்கள் மல்லர்கள் புத்ததேவரின் திருமேனிக்கு வணக்கம் புரிந்து வந்தனர்.

ஏழாவது நாளில் பரிமளம் மிகுந்த சந்தனச் சிதையின் மீது தேவரின் திருமேனி வைக்கப்பெற்றது. முதலாவதாக மகாகாசியபர், கைகளைக் கட்டிக்கொண்டு மிக்க வணக்கத்துடன் காஷடத்தை மும்முறை சுற்றி வந்து பெருமானின் திருவடிகளை வணங்கினார். பிறகு ஐந்நூறு பிக்குக்களும் அவ்வாறே செய்தனர்.