பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 ⚫ போதி மாதவன்

பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகளை நீதி நூல் முறைப்படி சித்தார்த்தருக்கு எடுத்துரைக்கும்படி அனுப்பி வைத்தார். வழக்கம்போல, இளவரசரின் அரண்மனைக்கு வெளியேயும், நகர வாயில்களிலும் அதிகக் காவலர்களும் நியமிக்கப் பெற்றனர். மன்னரின் சகோதரர்களும் நேரிலே சென்று காவலைக் கண்காணித்து வந்தனர்.

பெருந் துறவு

மாலை வந்து அகன்றது. இரவிலே வான வீதியில் முழுமதி தண்ணொளி பரப்பிக் கொண்டிருந்தது. அரண்மனை, தோட்டம், துரவுகள் எல்லாம் வெள்ளியால் செய்தவை போல, ஒரே வெண்மை மயமாகத் திகழ்ந்தன. சித்தார்த்தர் தமது அரண்மனை மாடியில் இசை மண்டபத்திலே உயர்ந்ததோர் பொற்பீடத்தில் அமர்ந்திருந்தார். நந்தவனத்தில் இளமான்கள் கூடியிருப்பதுபோல, நங்கையர் பலர் அவரைச் சூழ்ந்திருந்தனர். மேனகை போன்ற மெல்லியலார் சிலர் நடனமாடினர். குயிலையும் வெற்றிகொள்ளும் குரலில் சிலர் இனிமையாகப் பாடினர். வீணையும், முழவும், பிற கருவிகளும் காதுக்குக் குளிர்ச்சியான இசையைப் பரப்பிக் கொண்டிருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டாத கீதங்கள், பொன்னிறமான மின்னற் கொடிகள் அசைவது போன்ற ஆடல்கள், ஆராத அமுத மழை பொழிவது போன்ற இசைகள் ஆகியவற்றில் எதுவும் சித்தார்த்தர் கருத்தைக் கவரமுடியவில்லை. அவருடைய உடல்தான் அங்கிருந்ததே தவிர, உள்ளம் எங்கோ தொலை தூரத்தில் அருவிகள் பாயும் ஆனந்த வனங்களிலே திரிந்து கொண்டிருந்தது.

இரவு முழுவதும் அங்கே இசை வெள்ளமிட்டுப் பெருகிக் கொண்டிருப்பது வழக்கம். ஆனால் அன்று ஆடலும் பாடலும் திடீரென்று அமர்ந்து விட்டன.