பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 85

கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் கோவேந்தரின் குலக் கொழுந்தாகிய குழந்தை இராகுலன் வாடிய முளரிபோல், கண்ணயர்ந்திருந்தான். அன்னையின் மலர்க்கரம் அவன் தலைமீது கவிந்திருந்தது, சித்தார்த்தர் மெதுவாக அங்கே சென்று அவர்களைப் பார்த்தார். உயரேயிருந்து பொற் சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்த பொன் விளக்குக்களின் ஒளியோடு, சாளரங்களின் வழியாக நிலவொளியும் வீசிக்கொண்டிருந்தது. சீதளம் மிகுந்த இமயமலைக் காற்று ஜில்லென்று வீசிக் கொண்டிருந்தது. நந்தவனங்களிலிருந்த சண்பகம், முல்லை, மல்லிகை முதலிய மலர்களின் நறுமணமும் அத்துடன் கலந்து வந்தது.

உறங்கிக் கொண்டிருந்த யாசோதரை ஏதோ தீக் கனவுகள் கண்டு, துக்கத்துடன் திடுக்கிட்டு எழுந்து, ‘நாதா’ நாதா!’ என்று கூவினள். சித்தார்த்தர் அருகே சென்று, என் உயிரே! என்ன நேர்ந்தது? ஏன் துயரப் படுகிறாய்?’ என்று கேட்டார். தேவி தான் கண்ட கனவுகளைப் பற்றிப் பதைபதைப்புடன் கூறினள். முதலாவது கனவில், கட்டுக் கடங்காத அழகிய காளை ஒன்று தலைநகரிலிருந்து தப்பி ஓடிவிட்டது; அவளே அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பிடித்து நிறுத்த முயன்றும், அது கட்டுக்கடங்காமல் பறந்தோடிவிட்டது; அந்தக் காளை போய் விட்டால் நகரின் மங்களச் சிறப்புக்கள் மறைந்து விடும் என்று இந்திரன் கோயிலிலிருந்து ஒரு சப்தமும் கேட்டது இரண்டாவது கனவில், இந்திரன் ஆலயத்தில் நாட்டியிருந்த பழைய பொற்கொடி அற்று வீழவும். அழகிய புதுக்கொடி ஒன்று உயரே ஏறிவிட்டது; அதில் பொருள் செறிந்த சில புதுமொழிகள் பொறிக்கப் பெற்றிருந்தன; அதன்மீது வானத்திலிருந்து மலர்மழை பொழிந்தது. மூன்றாவது கனவில், தேவியின் அறையிலிருந்த சித்தார்த்தர் திடீரென்று மறைந்து விட்டார்; அவருடைய துகில் ஒன்று மட்டுமே அங்கே கிடந்தது; அத்-