பக்கம்:பௌத்த தருமம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

பெளத்த தருமம்


என்ற நெறியிலுள்ள விதிகளை அநுஷ்டிக்கிறான். நேரிய ஒழுக்கமே அவனுக்கு இன்பமாயுளது. தருமத்தில் கூறப்பட்டுள்ள விநய ஒழுக்கங்களை அவன் முறைப்படி நிறைவேற்றி, அவைகளுக்குத் தக்கபடி தன்னை மாற்றிக்கொள்கிறான் சொல்லிலும், செயலிலும் அவன் புனிதமான சூழ்நிலையை அமைத்துக் கொள்கிறான். பரிசுத்தமான முறையிலேயே தன் வாழ்க்கையை நடத்துகிறான். அவன் ஒழுக்கம் செம்மையானது, அவனுடைய பொறிகளின் கதவுகள் கட்டுக் காவலுக்கு அடங்கியிருக்கின்றன, கருத்தோடும், தன்னடக்கத்தோடும், அவன் முற்றிலும் இன்பமாக இருக்கிறான்.

ஒழுக்கத்தைப் பற்றிய விதிகள்

வசிட்டா! அவனுடைய ஒழுக்கம் நல்லதாயுளது என்றால், எதிலே ?

உயிரோடு இருப்பது எதையும் கொலை செய்யாமையினால், அவன் உயிரை அழிப்பதிலிருந்து விலகிவிடுகிறான், கம்பையும், கத்தியையும் அவன் விலக்கிவைத்து விடுகிறான்; அடக்கமும் தயையும் நிறைந்து, ஜீவனுள்ள, சகல பிராணிகளிடத்திலும் அவன் அன்போடும் கருணையோடும் விளங்குகிறான் !

இதுதான் அவன் பெற்றுள்ள நல்லொழுக்கம். தனக்குரியதாயில்லாத எதையும் தான் திருடிக்கொள்வதை விட்டுத் தனக்குக் கொடுக்கப்படாத எதையும் அவன் எடுத்துக்கொள்வதில்லை. ஆதலால் அவன் திருப்தியுடன், நேர்மையாகவும், இதயத் தூய்மையுடனும் தன் வாழ்க்கையைக் கழிக்கிறான்.

இதுவும் அவன் பெற்றுள்ள நல்லொழுக்கம்.

காம இன்பத்தை விரும்பாமல், நெறி தவறாமல், அவன் கற்பும், தூய்மையும் நிறைந்த வாழ்க்கையை நடத்துகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/175&oldid=1386867" இலிருந்து மீள்விக்கப்பட்டது