பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


செலுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றை ஒழிக்கவேண்டுமே இனி. நமது நாட்களில். அப்போதுதான் தன்னாட்சி நல்லாட்சியாக முடியும். அந்தக்காரியம் செய்யும்போது உத்தமர் உயிரைக் குடித்த மத ஆதிக்க வெறி உலவுமானால், எத்தனை கோட்சேக்கள் கிளம்புவரோ, என்பதை எண்ணும்போதே நெஞ்சு திடுக்கிடுகிறது.

மக்களை நல்லவர்களாக்கவேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி, ஜாதி ஆணவம், சுயநலம், ஆதிக்க எண்ணம் ஒழிந்தாக வேண்டும் - என்று பேசிவந்தபோதும் நாட்டை மீட்க வேண்டும் என்று அவர் அன்னியருடன் போரிட்டபோதும் கிளம்பாத பயங்கரச் சக்தியொன்று கிளம்பியது, கோட்சே உருவில். அதுதான் மத ஆதிக்கவெறி ; அதனால் கொலையுண்டார்.

தோட்டத்தை மண்மேடாக்கியவனிடமிருந்து மீட்டு அதைப் புன்னகைப் பூந்தோட்டமாக்குவதற்காக, அழகிய மலர்ச் செடிகளுக்கான விதைகளைத்தூவ, அங்குச் சென்ற போது, புதருக்குள்ளிருந்து, பாம்பொன்று வந்து கடித்துக் கொல்வது போள்,நாட்டை மீட்டு, நல்லாட்சி அமைத்து மக்களை நல்லவர்களாக்குவதற்காகக் கருத்தைப் பரப்பும் போது, கோட்சே கிளம்பினான். இந்தப் பழியைத் துடைத்தாகவேண்டும். பாரெங்கும் பேசுவர், நாட்டை மீட்டுத்தந்த உத்தமனை, உள்நாட்டு மத ஆதிக்க வெறி கொன்றது என்று.

மேட்டினைப் பூந்தோட்டமாக்க விதை கொண்டுவந்த வேளையில், பாம்பொன்றினால் இறந்த தோட்டக்காரனைக் கண்டு புலம்புவதும். பாம்பை அடித்துக் கொல்வது மட்டுமல்ல, குடும்பத்தாரின் கடமை. இறந்து கிடப்பவரின் கரத்திலே உள்ள விதையை எடுத்துப் பார்த்து விம்மி அழுதான். பிறகு,இவைகளைத் தூவி இங்கு பூந்தோட்டம் காண விரும்பினார்; அவர் மறைந்தார்.