பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மகாத்மா காந்தி

உலக உத்தமர் மறைந்ததால், உள்ளம் நொந்துகிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது; இழி குணத்தான் மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கொலைசெய்து, உலகம் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை. எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் - எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப் பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டு வரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை; துக்கம் தரும் நிலை அது. ஆனால், அவர் புகழ் ஒளி பரவுகிறது. அதை எண்ணுவோம். ஆறுதல் பெற முயற்சிப்போம்.

நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார். அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம்.