பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அவர் பிறந்தபோது நமது நாடு உலகிலே இழிவும் பழியும் தாங்கிய நாடாக இருந்தது. அவர் மறைந்திடுவதற்கு முன்னம், மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையிலே உள்ள சகல நாடுகளிலும், நமது விடுதலையை விளக்கும் விருதுபெற்று, தூதுவர்களும், வீற்றிருக்கும் நிலை உண்டாகிவிட்டது.

அவர் பிறந்தபோது உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால், உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அவர் பிறந்தபோது, இங்குத் தேவைப்படும் எந்தச் சாமானுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி,ஏங்கிக் கிடந்தோம். இன்று வெளிநாடுகள், நமது சரக்குகளைப் பெற நம்முடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்குத் தமது ராஜ தந்திரத்தை உபயோகிக்கும் அளவு மாறுதலைக் காண்கிறோம்.

அவர் பிறந்தபோது, கோயில்கள் மூடிக்கிடந்தன. தீண்டாதார் என்று தீயோரால் அழைக்கப்பட்டு வந்த தியாகப் பரம்பரையினருக்கு அவர் கண் மூடுமுன், மூடிக் கிடந்த கோயில்கள் எல்லாம் திறந்துவிட்டன.

குடித்துக்கிடப்பது மிகச் சாதாரணம். சகஜம் என்று யாரும் எண்ணிக்கொண்டிருந்த நாட்கள் அவர் பிறந்த காலம். மதுவிலக்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதைக் கண்டான பிறகே அவர் மறைந்தார்.

அவர் பிறந்த காலத்திலே, சூரியனே அஸ்தமிக்க அஞ்சும்படியான அளவுள்ளதாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். அந்தச் சாம்ராஜ்யத்தின் ஆதிக்கப்போக்கு அழிந்ததைக் கண்டான பிறகே அவர் கண்களை மூடினார்.

அவர் பிறந்த நாட்களிலே, பிரிட்டனிலிருந்து, கவர்னர்களும், மற்ற அதிகாரிகளும் இங்கு வந்த வண்ணம்