பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நடக்கட்டும்; இதை எதிர்ப்பதோ முடியாத காரியம். எனவே, இதற்குப் பயபக்தி விசுவாசம் காட்டி, ஏதேனும் பலன் பெற்றுக் காலந்தள்ளுவோம் என்று பலர் எண்ணி விட்டனர்.

அவர்களிடம் ஆயுதம் இல்லை - ஆட்சியாளர்களோ, ஆயுத பலமுள்ளவர்கள்.

அவர்களிடம் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களிடமோ, நம்பிக்கை, ஆணவமாகிவிட்ட நிலை.

இந்த நிலையிலே தோன்றினார் விடுதலைப் போர் தொடுக்க. யார் அந்தச் சமயத்திலே நாட்டை நோக்கினாலும், நம்பிக்கை துளியும் பிறக்காது இவர் நம்பிக்கையுடன் பணியாற்றலானார். நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நானிலத்தின் நன் மதிப்பைப் பரிசாகப் பெற்றார்

முடியுமா? என்ற சந்தேகத்தை அவர் விரட்டினார். நாடு விடுதலைபெறவேண்டுமா, அல்லவா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். ஆம்! என்றது அவருடைய தூய்மையான உள்ளம் -உள்ளம் உரைத்ததை ஊராருக்கு அறிவித்தார். ஊரார் சந்தேகமும் பயமும் கொண்டனர். "விடுதலை வேண்டும். நாடு மீளவும், கேடு தீரவும், நாம் இனி மனிதராய் வாழவும், கட்டாயமாக விடுதலை வேண்டும். ஆனால் நம்மால் முடியுமா?" என்று கேட்டனர்.

"விடுதலை வேண்டும் என்று மனம் கட்டளையிட்டு விட்ட பிறகு, மறு கேள்வி ஏது?" அவர் கேட்டார்.

"அவர்கள் பலசாலிகள் " மக்கள் கூறினர்.

"நாம் பலம் பெற வேண்டும். பெறுவோம்" அவர் உரைத்தார்,உறுதியுடன்.

"சிறையிலே தள்ளுவார்களே" பயத்துடன் கூறினர் மக்கள்