பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

137

போர் புரிந்தது. அவனை எப்படித்தான் கொல்வதென்று வீமனுக்கு விளங்கவில்லை. என்ன செய்வது? சராசந்தனை எப்படிக் கொல்வது? -என்று தெரியாமல் அவன் திகைத்தான். நல்லவேளையாக அப்போது அருகிலிருந்த கண்ணபிரான் ஒரு சிறு துரும்பைக் கையிலெடுத்து அதை இரண்டாகப் பிளந்து மாற்றி வீமனுக்கு அதை அடையாளமாகக் காட்டினார். வீமன் கண்ணபிரானின் சூசகமான இந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டான். ‘சராசந்தனின் உடலைப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டால் அவன் உறுதியாக அழிந்து போவான்’ -என்று கண்ணபிரானின் குறிப்பு விளக்கியது. உடனே வீமன் முழு ஆற்றலோடு ஆவேசம் கொண்டு சராசந்தனின் மேல் பாய்ந்தான். மறுகணம் சராசந்தனின் உடலை இரண்டாகப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டான். சராசந்தன் இறந்தான்.

வீமன் வெற்றி முழக்கம் செய்தான். உடற் பிளவுகளை முறை மாற்றிப் போடுவதற்கு முன்பு பல முறை உயிர் பிழைத்தெழுந்த உடல் இப்போது மட்டும் உயிரற்று வீழ்ந்து விட்டதைக் கண்ட அர்ச்சுனனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் தன் வியப்பைக் கண்ணபிரானிடம் கூறினான். அவர் அவனுடைய வியப்பைத் தெளிவு செய்வதற்காகச் சராசந்தனின் வரலாற்றைப் பிறப்பிலிருந்து தொடங்கி அவனுக்குக் கூறினார்.

“அர்ச்சுனா! இந்தச் சராசந்தனின் வரலாறு ஆச்சரியகரமானது. அதை உனக்கு இப்போது சொல்கிறேன் தெரிந்து கொள். தேவர்களின் பகைக் குலமாகிய அரக்கர் குலத்தில் ‘பிருகத்ரதன்’ -என்றோர் அரசன் இருந்தான். அந்த அரசனுக்குப் பல நாட்களாகப் புத்திரப் பேறு இல்லை . மனம் கலங்கி வருந்திய அவன், ‘சண்ட கெளசிகன்’ என்னும் தவவலிமை மிக்க முனிவரை வணங்கி வழிபட்டுத் தனக்கு அருள் செய்யுமாறு வேண்டிக் கொண்டான். பிருகத்ரதனின் நிலைக்கு மனமிரங்கிய சண்ட கெளசிக முனிவர் அவனுக்கு