பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
149
 

மகிழ வேண்டும்...” பொறாமையும் ஆவேசமும் தூண்டியதனால் பண்பாட்டை மறந்து பேசினான் துரியோதனன்.

“ஆம்! இன்றே இப்போதே அதைச் செய்தாக வேண்டும். இந்திரப் பிரத்த நகரத்துப் பளிங்கு மண்டபத்தில் நமது மதிப்பிற்குரிய பெருமன்னர் (துரியோதனன்) நடந்தபோது தடுமாறியதைக் கண்டு திரெளபதி இகழ்ச்சி தோன்றச் சிரித்தாள். மன்னர் மன்னனை இகழ்ந்த அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நெருப்பாகக் கொதிக்கிறது. வேள்விக்குச் சென்று வந்தோமே அதில்தான் நமக்கொரு சிறப்பு, மரியாதை உண்டா? எத்தனையோ அரசர்கள் போனார்கள்! வந்தார்கள்! அவர்களில் நாமும் ஒருவராகப் போய் வந்தோம். உறவைக் குறித்தோ, உலகம் புகழும் பேரரசராயிற்றே என்றோ , நமக்கு ஏதாவது தனி மரியாதை செய்தார்களா? எந்தத் தகுதியும் இல்லாத கண்ணபிரானுக்கு அல்லவா அவர்கள் தனிச்சிறப்பும் முதன்மையும் கொடுத்தார்கள். எதிர்த்துக் கூறிய சிசுபாலனை அழித்துவிட்டார்கள். பாண்டவரும் கண்ணனும் சேர்ந்து இந்த உலகையே வென்று ஆளக் கருதியிருக்கிறார்கள். இந்தக் கருத்து வெற்றி பெற விடக் கூடாது. இன்றே படையெடுத்துச் சென்று பாண்டவர்களை வெல்ல வேண்டும்...” துச்சாதனன் மீண்டும் இவ்வாறு கூறினான்.

கர்ணன் பாண்டவர்களுக்கு எதிராகப் பொறாமைக்கனல் முட்டி விட்டிருந்தாலும் அவன் உள்ளத்தில் நேர்மை ஒருபால் வாழ்ந்தது. அதனால் அவன் “அரசே! பாண்டவர்களைப் போர் செய்து வெல்ல வேண்டியது தான் முறை, சூழ்ச்சி செய்து வெல்வது நமக்கு இழுக்கு, நம்முடைய ஆண்மைக்கு இழுக்கு. நாமும் வீரர்கள், நமக்கும் வீரமிருக்கிறது. சூழ்ச்சி செய்ய வேண்டியது ஏன்?” - என்று துணிவோடு துரியோதனனை நோக்கிக் கூறினான். ‘சூழ்ச்சி செய்து வெல்ல வேண்டும்’ -என்ற துரியோதனனின் கருத்தையே கர்ணன் துணிவாக எதிர்த்துப் பேசியது