பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

163

கருங்குழலில் கவர்ச்சிகரமாகச் சூடிக் கொண்டனர். அங்கே தங்கியிருந்த நேரம் யாவருக்கும் களிப்பை அளித்து விட்டுக் கழிந்தது. சோலையிலிருந்து புறப்பட்ட பின்னர் வரிசையாக மருதம், குறிஞ்சி, நெய்தல் நிலங்களைக் கடந்து சென்றனர். வயலும் ஊர்களும் சூழ்ந்த பிரதேசமாகிய மருத நிலத்தில் வெண்ணெய், தயிர், பால் முதலியவற்றை அந்நில மக்கள் அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்து கொடுத்தனர். மலைச்சிகரங்களின் பசுமை கலந்த கம்பீரமான அழகையும், கடலின் எல்லையற்ற நீலநிற நீர்ப்பரப்பையும் முறையே குறிஞ்சி, நெய்தல் நிலங்களில் கண்டுகளித்தவாறே அவர்கள் சென்றனர்.

பாண்டவர்கள் துரியோதனாதியர் தலைநகரமாகிய அத்தினாபுரியை நெருங்கும்போது அந்தி மயங்கி இருட்டு கின்ற நேரமாக இருந்ததனால் ஊருக்கு வெளியே புறநகரிலிருந்த சோலையொன்றில் இரவு நேரத்தைக் கழித்துவிட்டு மறுநாள் காலை நகருக்கு பிரவேசிக்கலாம் என்று தீர்மானித்தனர். பிரயாண அலுப்புத் தீர அந்தக் சோலையில் இரவைக் கழித்தனர். கீழ்த்திசை வெளுத்து அருணோதயமாகப் போகின்ற சமயம் தருமன் விழித்துக் கொண்டான், தம்பியர்களையும், திரெளபதியையும் எழுப்பினான். யாவரும் அங்கேயே காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நகருக்குள் கிளம்பினர். படைகளும் பரிவாரங்களும் மட்டும் தருமன் கட்டளைப்படி அதே சோலையில் இருந்தன. தம்பிமார்களோடும், மனைவியோடும் நகரத்துக்குள்ளே புறப்பட்டுச் சென்ற தருமன் நேரே பெரிய தந்தை திருதராட்டிரனின் மாளிகைக்குச் சென்றான். காவலர்கள் மூலம் திருதராட்டிர மன்னனுக்குத் தாங்கள் வந்திருப்பதைச் சொல்லியனுப்பினான்.

உள்ளே சென்று வந்த காவலர்கள் தருமன், திரெளபதி, தம்பியர்கள் ஆகிய யாவரையும் அழைத்துக்கொண்டு போய்த் திருதராட்டிர மன்னனுக்கு முன்னால் நிறுத்தினார்கள். உடனே பாண்டவர்களும் திரெளபதியும் தங்கள்