பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
179
 

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளப் போகிறீர்கள். என்னால் உங்களுக்குக் கூற முடிந்தது இதுதான். இதை நீங்கள் கடைப் பிடித்தால் நல்லபடியாக வாழலாம். உங்கள் போக்கின்படி சென்றாலோ அழிவுதான்” -கூறி விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் விதுரன்.

“உனக்கு எப்போதும் எங்களைத் தூற்றுவதே வழக்கம். எங்களிடம் சோறு உண்டு சுகம் அனுபவித்து விட்டு பாண்டவர்கள் பக்கம் பரிந்து பேசும் நன்றி கெட்ட செயலைத்தான் நீ செய்வாய்! உன் பேச்சை இப்போது இங்கே எங்களில் யாரும் கேட்கத் தயாராயில்லை.” துரியோதன்னுடைய இதழ்களில் ஏளனச் சிரிப்பு நெளிந்தது. அவன் பிராதிகாமி என்ற பெயருடைய தேர்ப் பாகனை அழைத்தான். விதுரனுக்கு இட்ட அதே கட்டளை அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

“பிராதிகாமீ! இவர் நிறைவேற்ற மறுத்த கட்டளையை நீ நிறைவேற்ற வேண்டும். போ! திரெளபதியை இங்கே அழைத்துக் கொண்டு வா!” பிராதிகாமி அரசவை ஊழியன். நல்லதோ, கெட்டதோ, அரசன் கட்டளையை மறுக்க அவனுக்கு என்ன அதிகாரம்? அவன் கட்டளைக்கிணங்கித் திரெளபதியை அழைத்து வருவதற்காக அந்தப்புரம் நோக்கிச் சென்றான். சிந்தனையாற்றல் மிகுந்த அத்தேர்ப்பாகன் போகும் போதே இந்தத் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒருவழி கண்டுபிடித்தான். அந்தத் தந்திரமான வழி தோன்றியதும் மேலே போகாமல் அப்படியே அவைக்குத் திரும்பி விட்டான்.

“அரசே! நான் தங்கள் கட்டளையின்படி சென்று திரெளபதியை அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், என் கணவர் தம்மை தோற்பதற்கு முன்பே என்னை வைத்துத் தோற்றாரா? அல்லது தன்னை தோற்ற பின்பு என்னைத் தோற்றாரா? தெரிந்து வா; பின்பு வருகின்றேன் என்று கூறுகின்றாள்” என்பதாக ஒரு பொய்யைக் கற்பித்துத் துரியோதனனிடம் கூறினான்.