பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
197
 

போகிறாய்? நீதான் வெறுங்கையனாய் மேலாடையையும் இழந்து வீற்றிருக்கிறாயே?” என்று கேட்டான் சகுனி.

“பொருள் இல்லாவிட்டால் என்ன? இது வரை நான் செய்த நற்செயல்களால் எனக்குக் கிட்டியிருக்கின்ற அவ்வளவு புண்ணியமும் இருக்கின்றதே? அதையே இந்த ஆட்டத்திற்குப் பந்தயமாக வைக்கிறேன்! எடு காய்களை, விளையாடலாம்!” என்று சாமர்த்தியமாக அவனுடைய கேள்வியைச் சமாளித்தான் தருமன். சகுனி விளையாடச் சம்மதித்தான்.

விளையாட்டு மறுபடியும் ஆரம்பமாகியது. திரெளபதி கண்ணபிரானைத் தியானித்துக் கொண்ட மகிமையோ! அல்லது தருமனின் புண்ணியப் பயனோ வரிசையாக அடுத்தடுத்து வெற்றிகள் தருமனின் பக்கமே விளைந்து கொண்டிருந்தன. சகுனி பேயடிப்பட்டவன் போலச் சோர்ந்து போனான், அடிமைத்தனத்தை மட்டும் வென்று கொள்வதற்காக ஆடிய ஆட்டம் தருமனுக்கு அடுக்கடுக்காக அவன் தோற்றுப்போன யாவற்றையுமே வென்று கொடுத்துவிட்டது. முதலில் ஆடிய ஆட்டத்தில் தருமனுக்கு நேர்ந்திருந்த முழுப் பெருந்தோல்வி இப்பொழுது சகுனிக்கு ஏற்பட்டது. சகுனி தலை தாழ வாய்மூடி மெளனியாக அவமானம் தாங்காமல் வீற்றிருந்தான்.

தான் தோற்றவற்றை எல்லாம் வென்று விட்டாலும் கூட வீட்டுமர் துரோணர் முதலியவர்கள் கூறிய அறிவுரைப்படி பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த பின்னரே அரசாட்சி மேற்கொள்ள விரும்பினான் தருமன். அதுவரை துரியோதனாதியர்களே தன் உடைமைகளை எல்லாம் அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் அவன். பெரியோர்களும் நல்லவர்களும் தருமனின் உயரிய மனோபாவத்தைப் பாராட்டினார்கள் எண்ணி வியந்தார்கள். துரியோதனாதியர்களது கல்மனங்களையே தருமனுடைய அந்த எதிர்பாராத தியாகம் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.