பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

அறத்தின் குரல்

அடைந்துள்ளேன். என் பெயர் தந்திரி பாலன். கலைஞர்க்குப் புகலிடமாக விளங்கும் தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” -என்று குழந்தை சொற்களால் வேண்டிக் கொண்டான். விராட மன்னனும் அவன் நிலைமைக்கு மனமிரங்கி அவனைத் தன் அரண்மனையிலுள்ள கோவலர்களுக்குத் தலைவனாக நியமித்தான்.

திரெளபதி ஒருத்தி தான் எஞ்சியிருந்தாள். அவள் விஷயம் இவர்கள் ஐவரையும் போல அவ்வளவு சுலபமானது இல்லை. அவள் பெண்! இடம், பொருள், ஏவல், பதவி பார்த்து வாழ வேண்டியவள். கற்பையும் பெண்மையையும் காப்பாற்றிக் கொள்ள முடிந்த மாறு வேடத்தோடுதான் அவள் அரண்மனையில் நுழைய முடியும். அப்படிப்பட்ட வேடம் ஒன்றை அவள் சிந்தித்துத் தேர்ந்தெடுத்தாள். அரண்மனைப் பெண்களுக்கு அலங்கரிக்கின்ற கலையில் வல்லவள் போல மாறுவேடம் கொண்டு வண்ண மகளாக விராடராசனின் கோப்பெருந்தேவியைக் காணச் சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கருணை மிக்க மனமுடையவள். வண்ணமகளாக வந்தவளை அன்புடன் வரவேற்று விசாரித்தாள்.

“தேவீ! என் பெயர் விரதசாரிணி என்பது. நான் அந்தப்புரத்து மகளிர்க்கு அலங்கரித்து விடுகின்ற வண்ணக் கலையில் நன்கு பழகியவள். முன்பு பாண்டவர்களின் அந்தப்புர மகளிர்க்கு வண்ணமகளாக இருந்திருக்கிறேன். துரியோதனனுடைய சூழ்ச்சியால் பாண்டவர்கள் நாடிழந்து காடு சென்றபின் ஒரு பணியுமின்றி நாட்களை வீணே கழிக்கின்றேன். ஆடையுடுத்தல், அணிகலன் அணிவித்தல், திலகமிடுதல், போன்ற கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் விரதங்களும் ஒழுக்கமுமே வாழ்க்கையின் உயிரெனக் கருதுகின்றவள். பிறந்த வீட்டில் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்திலிருந்தே தேவர்களால் காவல் செய்யப்படும் தெய்வீகமான கற்பைப் போற்றி வருகிறேன். ஆண்களின் முகத்தை நான் காண்பதே இல்லை.