பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

அறத்தின் குரல்

விராடனுடைய அவைக்களத்தைச் சேர்ந்த மல்லர்கள் ஒவ்வொருவராகப் போர் செய்து தோற்றுப் போனார்கள். விராடனுக்குத் தலை தாழ்ந்து விட்டது. தன் மல்லர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனது பெருமைக்கு ஏற்பட்ட தோல்வியாகவே கருதினான் அவன். ஆனாலும் என்ன செய்வது? திறமைக்கு மதிப்புக் கொடுத்துத் தானே ஆக வேண்டும்? எனவே வாசவமல்லனுக்குச் செய்ய வேண்டிய வெற்றி மரியாதைகளை முறைப்படி செய்தான். அவன் மனத்தில் தன் அவையில் தன் மல்லர்களே தோற்கடிக்கப்பட்ட ஏக்கம் மட்டும் குறையாமலிருந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த ஏக்கத்தை முனிவராக, கங்கர் என்ற பெயரோடு அவனருகே அவையிலிருந்த தருமன் கண்டு கொண்டான்.

“அரசே! உங்கள் கலக்கத்தை நான் உணருகிறேன். இந்த வாசவ மல்லனை வெல்வதற்கு ஏற்ற சரியான ஆள் ஒருவன் நம்முடைய அரண்மனைச் சமையற்காரர்களுக்கிடையே இருக்கிறான். அவனுக்கு மற்போரில் நல்ல பழக்கம் உண்டு, அவன் பெயர் பலாயனன். அவனை அழைத்து இவனோடு போருக்கு மோதவிட்டால் இவன் செருக்கு ஒழிந்து போகும்” என்று கங்கராக இருந்த தருமன் விராடனை நோக்கிக் கூறினான். விராடன் உடனே சமையற்காரப் பலாயன்னை அழைத்து வருமாறு காவலனை அனுப்பினான். வீமனுடைய மற்போர் வன்மைக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென்பதற்காகவே 'தருமன்’ விராடனுக்கு இந்த எண்ணத்தைத் தூண்டி விட்டான். விராடனோ தான் தோற்ற பெருமையை எல்லாமே மீண்டும் பெற்றவனைப் போல நம்பிக்கையோடு பலாயனனை அழைத்து வரச் செய்தான். மற்போர் என்றதுமே பலாயனன் என்றும் பெயருக்குள் ஒளிந்து கொண்டிருந்த வீமனுக்கு மனத்தில் ஒரே ஆனந்தம். வெகு நாட்களாகத் தினவெடுத்துக் கிடந்த தோள்களுக்கு நல்விருந்து கிடைக்கப் போகிறதே என்ற மனமகிழ்ச்சியோடு அரசவைக்கு வந்தான் அவன்.