பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
281
 

விரைந்தான். வடக்குப் பகுதியில் எதிர்பாராதவிதமாகத் துரியோதனன் படை வந்ததும் அங்கிருந்தவர்கள் பதறிப் போய் அரண்மனைக்கு ஓடினர். தெற்கு எல்லையில் திரிகர்த்தனையும் படைகளையும் அடக்கிப் பசுக்களை மீட்கப் போயிருந்த விராடன் முதலியவர்கள் அதுவரை அரண்மனைக்குத் திரும்பவில்லை. அரண்மனையில் சுதேஷ்ணை, இளவரன் உத்தரன், பேடியாக இருக்கும் அருச்சுனன் ஆகிய மூவரே இருந்தனர். ஓடி வந்த மக்கள் சுதேஷ்ணையிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூறினர். வீரப்பண்பு மிக்க சுதேஷ்ணை, ‘நாட்டுக்குத் துன்பம் ஏற்பட்டால் அரசனைப் போலவே அரசிக்கும் அதைக் காப்பது கடன்’ என்று எண்ணினாள். ஆனால் அதற்குள் இளவரசன் உத்தரன் தானாகவே போர்க்கோலம் பூண்டு, “தாயோ போர்க்களத்திற்கு நான் செல்லுகிறேன். எனக்குத் தேர் ஓட்டுவதற்கு மட்டும் ஓரு ஆளைக் கொடுங்கள்” என்றான்.

அப்போது பேடியாக இருந்த அருச்சுனன், விரதசாரிணி முதலியவர்கள் அங்கிருந்தனர். விரதசாரிணி பேடியைச் சுட்டிக் காட்டி, “தேவீ! இவளுக்கு நன்றாக ஓட்டத் தெரியும்; இவள் ஏற்கனவே அருச்சுனன் முதலியோருக்குப் பலமுறை தேரோட்டிப் பழகியவள்“ என்றாள். பிருகந்தளை என்ற பெயரோடு பேடியாக இருந்த அருச்சுன்னும் தேரோட்டிச் செல்வதற்கு இணங்கினான். பலவகை ஆயுதங்கள் நிறைந்த தேரில் நல்ல குதிரைகளைத் தேர்ந்தெடுத்துப் பூட்டி உத்தரகுமாரனை அமரச் செய்து தேரைச் செலுத்திக் கொண்டு வடதிசைப் போர்க்களம் நோக்கிச் சென்றான் அர்ச்சுனன். அங்கே போர்க்களத்தில் கௌரவர்களின் படை கடல் போலப் பரந்திருந்தது. உத்தரகுமாரன் அரண்மனையில் வீரம் பேசினானே ஒழியப் போர்க்களத்தைக் காண்பது இதுவே அவனுக்கு முதல் முறை. படைகளைக் கண்டதும் நடுக்கம் உண்டாகிவிட்டது அவனுக்கு. பெண்ணுருவத்தில் பேடியாக அமர்ந்து களத்தினிடையே துணிவாகத் தேரை ஓட்டுகிறவளுக்கு இருந்த துணிச்சல் கூட அவனுக்கு இல்லை.