பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

293

நெற்றியில் காயப்படுத்தியதற்காக நீங்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாட்டுக்கு என் அசட்டுத்தனத்தால் ஏற்பட விருந்த தோல்வியைத் தடுத்து வெற்றியை உண்டாக்கிக் கொடுத்த அர்ச்சுனனுக்கே என் தங்கை உத்தரையை மணம் செய்து கொடுக்க வேண்டும்” என்றான் உத்தரன்.

விராடன் உடனே கங்க முனிவராக இருந்த தருமனை வரவழைத்து, ‘தான் அறியாமல் செய்துவிட்ட பிழை’யை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். “நான் அதை அப்போதே மன்னித்து மறந்துவிட்டேனே!” என்று சிரித்துக்கொண்டே கூறினான் தருமன். உடனே வீமன், அர்ச்சுனன் முதலிய மற்ற சகோதரர்களையும் வருவித்து மகிழ்ச்சியோடு அவர்களுக்குரிய மரியாதையைச் செய்தான். மறுநாள் காலையில் பாண்டவர்களும் திரெளபதியும் தாம்தாம் கொண்டிருந்த அஞ்ஞாத வாசத்துக்குரிய மாறுவேடங்களை விட்டுவிட்டுச் சுயஉருவை அடைந்தனர். விராடன் காணாத விருந்து வரக் கண்டவன் போலப் பெருமகிழ்ச்சி அடைந்தான். ஏன்? விராட நகரமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. தருமனுடைய நெற்றியில் ஏற்பட்டிருந்த வடுவை அர்ச்சுனன் இப்போது தான் பார்த்தான். மனம் பதைத்து, “அது எப்படி ஏற்பட்டது?” -என்று கேட்டான். அருகே நின்று கொண்டிருந்த திரெளபதி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள். அதைக் கேட்ட அர்ச்சுனனுக்கு அடக்க முடியாத சினம் வந்துவிட்டது.

“அப்படியா செய்தான் அந்த விராடன்? என்ன செய்கிறேன் பாருங்கள்! அவனையும் அவன் நகரத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விடுகிறேன். இந்த வில்லிருந்து புறப்படும் ஒரே ஒரு அம்பினால் விராடன் தலையை அறுத்து வீழ்த்தாவிட்டால் என் பெயர் அர்ச்சுனன் இல்லை” -என்று அர்ச்சுனன் தணிக்க முடியாத ஆக்ரோஷத்தோடு வில்லை நாணேற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டான், வீமனுக்கும் அந்த விஷயம் அப்போது தான் தெரிந்தது. அவனும்