பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

அறத்தின் குரல்

பார்த்த வீட்டுமர் கொஞ்சம் மனக்கொதிப்புடனேயே எழுந்து பேசினார்: “வனவாசம் முடிந்ததும் நாட்டைத் தருவதாக முன்பு உறுதிமொழி கூறிவிட்டு, இப்போது இப்படிப் பேசுவது ஆண்மைக்கு அழகில்லை. போர் என்று வந்துவிட்டால் அர்ச்சுனன் ஒருவனுக்குக்கூட உங்களால் எதிர் நிற்க முடியாது. ஏன் போர் போர் என்று வீணாகத் துள்ளுகிறீர்கள்?” இவ்வாறு வீட்டுமர் துரியோதனனை இகழ்ந்து பேசியதைக் கர்ணனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் வீட்டுமனுக்கு மறுமொழி கூறினான்:-

“கிழட்டு வேங்கையைப் போல இருந்த பரசுராமனை நீ எப்படிக் கொன்றாய் என்பது உனக்கு மறந்துவிட்டதா? எந்தப் பரசுராமனிடம் அருங்கலைகளை எல்லாம் நீ கற்றாயோ, அதே பரசுராமனை நீ கொல்லவில்லையோ? உனக்குக் கற்பித்த ஆசிரியனை மாணாக்கனாகிய நீ எப்படி வென்றாயோ அப்படியே நானும் கெளரவர்களும், பாண்டவர்களை வென்று வாகை சூடுவோம்.” வயது முதிர்ந்தவராகிய வீட்டுமருக்குக் கர்ணனுடைய சொற்கள் அளவிலடங்காத கோபத்தைக் கிளறிவிட்டன.

“அடே! கர்ணா, ‘நீ யாரோடு பேசுகிறாய்’ என்பதனை யோசித்து, மட்டு மரியாதையோடு பேசப் பழகிக் கொள். அன்று. திரெளபதிக்குச் சுயம்வரம் நடந்தபோது நீயும் தான் அர்ச்சுனனோடு போர் செய்து பார்த்தாயே? உன்னால் அவனை வெல்ல முடிந்ததா? ஒரு சமயம் உன்னுனடய மதிப்பிற்குரிய நண்பன் துரியோதனனைத் தேவர்கள் தேர்க்காலில் கட்டி இழுத்துக் கொண்டு போனார்களே! அப்போது உன் வீரம் எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது? கடைசியில் துரியோதனனைத் தேர்க்காலிலிருந்து விடுவிக்க வீமன் வரவேண்டியிருந்ததே ஒழிய உங்களால் முடிந்ததா? அட இவையெல்லாந்தான் போகட்டும். சமீபத்தில் விராட நகரத்தில் உங்களுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நடந்தது. உங்களில் யாராவது அவனை வென்றீர்களா? வெல்லவில்லை. வெல்வதற்குப் பதிலாக மூன்று முறை புறங்காட்டி ஓடினாய்