பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
327
 “அண்ணா ! இந்த விகருணனைப் போன்ற சிறு பிள்ளைகளை எல்லாம் நீ இங்கே ஆலோசனை சபைக்குள்ளே எதற்காக அனுமதித்தாய்? இவனை உள்ளே விட்டதனால்தானே இப்படிச் சிறு பிள்ளைத்தனமாகப் பேசுகிறான்? இனிமேல் யாரது யோசனையும் தேவையில்லை. வாருங்கள்! இப்படியே ஆயுதங்களுடன் போய் விதுரன் மாளிகையை வளைத்துக் கொள்வோம். அங்கே தான் கண்ணன் தங்கியிருக்கிறான். மாளிகையைச் சுற்றித் தீ வைத்துவிட்டால் கண்ணன் சாவது உறுதி” என்று துச்சாதனன் கூறி முடித்தான்.

உடனே கர்ணன் “அவ்வளவு முயற்சி எதற்கு? வீட்டை வளைத்துக் கொண்டு நெருப்பு வைக்காமலே ஓரே ஓர் அம்பினாலேயே நான் அவனைக் கொன்று விடுவேனே? இன்றிரவே இச்செயலை நிறைவேற்றி விடுவோம். புறப்படுங்கள்” என்றான். யாவருக்கும் இறுதியாகப் பேசிய சகுனி சாத்தியமானதொரு யோசனையைக் கூறினான்.

“கண்ணனைத் தீர்த்துக் கட்ட வேண்டியது அவசியம் தான். இவனை இப்படியே தப்பவிட்டுவிட்டால் இவன் போய்ப் பாண்டவர்களை இன்னும் தூண்டி விடுவான். பாண்டவர்களோடு நாம் போர் செய்ய நேரிட்டால் நிச்சயமாக நமக்குத்தான் தோல்வி ஏற்படும். சந்தேகமே இல்லை. ஆகையால் கண்ணன் இங்கிருந்து திரும்பி உயிருடன் போகவிடாமல் தடுக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்காகத் தூது வந்திருக்கின்ற அவனை வெளிப்படையாகக் கொன்று மக்கள் கூறுகிற பழிக்கும் பாவத்துக்கும் நாம் ஆளாகிவிடக் கூடாது. செய்வதை யாருமறியாமல், யார் செய்ததென்றே தெரியாமல் வஞ்சகமாகச் செய்துவிட்டால் ஒரு வம்புமில்லை இதோ, நான் கூறுகிறேன் இப்படிச் செய்து விட்டால் என்ன? கண்ணனை நம் வீட்டிற்கு விருந்தினனாகக் கூப்பிடுங்கள். அவன் உட்கார்வதற்கென்றே சிறப்பாக ஓர் ஆசனம் அமையுங்கள். அந்த ஆசனத்தின் அடியில் மேலே தெரியாது மறைவாக ஒரு பெரும் பள்ளத்தை வெட்டுங்கள்.