பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

339

வெற்றி கிடைத்துவிடப் போகிறதோ’ என்று அஞ்சியே நடு விளையாட்டில் எழுந்திருப்பதாக நினைத்துக் கொண்டேன், எனக்கு ஆத்திரம் வந்து விட்டது. மரியாதை, வரன்முறை எல்லாவற்றையும் மறந்து அவளைத் தொட்டு அவள் இடுப்பிலிருந்த மேகலையைப் பிடித்து இழுத்து விட்டேன். நான் இழுத்த வேகத்தில் மேகலை அறுந்துவிட்டது. அறுந்த மேகலையிலிருந்து மணிகள் சிதறின. நானும் பதறிவிட்டேன். அவளும் பதறிவிட்டாள். “என்ன கர்ணா! இந்த மணிகளை எல்லாம் நான் எடுத்துக் கோத்து விடட்டுமா?” என்று கேட்டுக் கொண்டே விகல்பமில்லாத முகபாவத்தோடு துரியோதனன் எனக்கு முன்வந்தான். அப்போதுதான் துரியோதனன் அங்கே வந்திருப்பதும் அவள் எழுந்திருந்ததன் காரணமும் எனக்கு விளங்கின. தனிமையாக இருக்கும்போது ஒருவன் மனைவியிடம் இப்படி அடாத முறையில் அத்துமீறி நடந்து கொண்டிருந்தால் காரணத்தைக்கூட ஆராயாமல் கொலை செய்ய வந்து விடுவான். ஆனால் துரியோதனுடைய பெருந்தன்மைதான் அவன் என்னை மன்னிக்குமாறு செய்தது. நான் செய்தது மிகப் பெரிய தவறுதான்! ஆனால் அவன் அதை ஒரு சிறிய தவறாகக்கூட எண்ணவில்லை. அப்படிப்பட்ட துரியோதனனுக்கு என் உயிரையே கொடுத்தாலும் தகுமே! நான் எப்படி அம்மா நன்றி மறப்பது? சோற்றுக்கடன் கழிப்பதற்காகவாவது போரில் அவன் பக்கம் என் உயிரைத் தியாகம் செய்தாக வேண்டும். தாயே! தயவு செய்து நீங்கள் வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். மறுக்காமல் தருகிறேன், என்னைப் பாண்டவர்கள் பக்கம் சேரும்படியாக மட்டும் வற்புறுத்தாதீர்கள்! நான் உங்களுக்குத் தரமுடியாதது இது ஒன்று தான்!” - கர்ணன் உருக்கமாக நீண்ட நேரம் பேசி முடித்தான்.

“அப்படியானால் நான் கேட்கின்ற வேறு சில வேண்டுகோள்களையாவது நிறைவேற்றுவாயா?”

“ஆகா! கேளுங்கள். தாராளமாக நிறைவேற்றுகிறேன்."