பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/365

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
363
 


“கண்ணா! இந்தப் போர் வேண்டாம். என்னை விட்டு விடு! நான் போய் விடுகிறேன். வில் இந்தா, வாள் இந்தா, அம்பறாத் தூணி இந்தா, எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள். என்னைவிட்டு விடு”

கண்ணன் முன்னிலும் இரைந்த குரலில் கலகலவென்று கிண்கிணி நாதம் போலச் சிரித்தான். அர்ச்சுனனை இமைக்காமல் ஏறிட்டுப் பார்த்தான். பார்வை என்றால் சாதாரணமான பார்வையா அது? சர்வத்தையும் ஊடுருவி நோக்கும் ஆழ்ந்த கூரிய பார்வை!

“அர்ச்சுனா நீ என்னிடம் விளையாடுகிறாயா? அல்லது உண்மையாகவே தான் இப்படிக் கேட்கின்றாயா?”

“உண்மையாகவேதான் சொல்கிறேன் கண்ணா! அண்ணனையும் தம்பியையும் ஆசிரியனையும் பாட்டனையும் கொன்று பெறுகின்ற வெற்றி எனக்கு வேண்டவே வேண்டாம். உறவினர்களைக் கொன்று அரசாட்சியை அடைய முயலும் தீவினையிலிருந்து என்னை விடுதலை செய்து விடு.”

உண்மையாகவே அர்ச்சுனன் மனம் பேதலிந்து விட்டான் என்பதைக் கண்ணன் உணர்ந்துகொண்டான். பொறுப்புணர்ச்சிமிக்க கண்ணனின் உள்ளம் சிந்தித்தது. ‘சரியானபடி அறிவுரை கூறித்தான் அர்ச்சுனனுடைய மனம் திருந்தச் செய்ய வேண்டும். இப்படியே விட்டுவிட்டால் அவன் போர்க்களத்தை விட்டே ஓடினாலும் ஓடிவிடுவான். அர்ச்சுனன் மனத்தில் “போர் செய்வது தவறில்லை; போர் செய்யலாம்” என்ற விருப்பத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும்’ தேரின் முன்புறத்திலிருந்து எழுந்து அர்ச்சுனனுக்கு அருகில் சென்றான் கண்ணன்.

“அர்ச்சுனா! இப்போது நான் கூறப்போவதைக் கவனமாகக்கேள். வீண் ஆசாபாசங்களில் சிக்கிக் கடமையைக் கைவிட்டு ஓடிவிடாதே. ஜன்மா எப்படி நேருகிறது? எதற்காக நேருகிறது? ஏன் நேருகிறது? உனக்குத்