பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/431

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
429
 

ஆகிய மூவரையும் அருகில் அழைத்தான். “நீங்கள் உடனே படைகளோடு விரைந்து சென்று வீமனை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துங்கள். வீமன் அபிமன்னனோடு ஒன்று சேரக் கூடாது. இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால் நம்முடைய வியூகம் சீக்கிரமே அழிந்து விடும்’ என்று கட்டளை யிட்டான். துரியோதனனுடைய கட்டளையின்படியே அவர்கள் வீமனை எதிர்க்கப் புறப்பட்டனர். அவர்கள் சென்ற பின்பும் தன் தம்பிமார்கள், வேறு பல அரசர்கள் எல்லோரையும் வீமன் மேல் ஏவிவிட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். பஞ்சுச் சுருள்களை மேலும் மேலும் தன்னகத்தே வாங்கிப் பஸ்பமாக்கும் நெருப்பைப் போல வீமன் தன்னை எதிர்த்து வந்தவர்களை எல்லாம் சமாளித்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் வீமனால் அபிமன்னனை நெருங்கி அவனோடு சேர்ந்து கொள்ள முடியவில்லை. வியூகத்தின் உட்புறத்தில் அபிமன்னனும், வெளிப்புறத்தில் வீமனுமாக மாட்டிக் கொண்டார்கள். தன்னைச் சுற்றி அணி அணியாக நிற்கும் படைகளை அழித்தால்தான் அபிமன்னன் வியூகத்தின் வெளியே வரமுடியும். துரியோதனன் தன் மேல் ஏவி விட்டிருக்கும் மன்னர்களையும் வீரர்களையும் முற்றிலும் தோற்றோடச் செய்தால்தான் வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனுக்குப் பக்கமாக நிற்க முடியும். மலைமலையாக வீரர்கள் எதிர்த்து வந்தாலும் வீமன் கலங்காமல் அவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்த துரியோதனன் மீண்டும் தனக்குள் பயந்து விட்டான். “ஒரு வேளை வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனோடு சேர்ந்து கொண்டு விடுவானோ?” என்ற எண்ணமே துரியோதனனது பயத்திற்குக் காரணம். இவ்வாறு பயம் தோன்றியவுடனேயே அவன் தன்னுடைய அடுத்த சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்குத் தயாராகி விட்டான். வீரத்தால் எதிரியை வெல்வதற்குத் தெரிந்தவன் வீரத்தைக் கொண்டு வெல்ல முடியும். வீரமில்லாதவன் என்ன செய்வது?