பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/432

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
430
அறத்தின் குரல்
 

சூழ்ச்சியால் தானே தன் எண்ணத்தை ஆக்கிக் கொள்ள முடியும்? துரியோதனன் தன் சூழ்ச்சியைச் சிந்து தேசத்து மன்னனாகிய சயத்திரதன் என்பவனோடு கலந்தாலோசித் தான். “சயத்திரதா! வீமன் அபிமன்னனோடு சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் படைகளை ஏவினேன். ஆனால் படைகளால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, இப்பொழுது வேறோரு தந்திரம் செய்தாக வேண்டும். அந்தத் தந்திரத்தைச் செய்வதற்கு உன்னைத் தவிர வேறு தகுதியான ஆளே இல்லை. வீமன் சிவபக்தி மிக்கவன். சிவபெருமானுக்கும் அவன் அணிந்து கொண்டு கழித்த பொருளுக்கும் பெருமதிப்புச் செலுத்துபவன். ஆகவே நீ ஒரு பெரிய கொன்றை மலர் மாலையைச் சிவபெருமானுக்கு அணிந்து கழற்றி வந்து வீமனின் தேருக்கு முன்னால் குறுக்கே போட்டுவிடு. நீ சிவபெருமானிடம் பக்தி மிக்கவனென்று வீமன் எண்ணிக் கொண்டிருப்பான். ஆகையால் மாலையைக் கண்டு பயபக்தியோடு வணங்கித் தேரை மேலே செலுத்தாமல் அப்படியே நிறுத்தி விடுவான் வீமன். அபிமன்னனோ வியூகத்திற்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான். கொன்றை மாலையை நடுவில் எறிந்து வீமனைத் தடுத்து நிறுத்திய பிறகு, நீயே இன்னும் ஒரு காரியமும் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் நீ பெற்றிருக்கும் கதாயுதத்தால் அபிமன்னனுடைய தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றுவிட வேண்டும். இந்த இரண்டு செயல்களும் இன்று உன் உதவியால் இங்கே நிறைவேற வேண்டும்.” துரியோதனன் வேண்டுகோளுக்குச் சாத்திரதன் இணங்கினான்.

எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானை நினைத்தான். தியானமும் வழிபாடும் செய்து கொன்றை மாலையை வரவழைத்தான். பின்பு அம்மாலையை வீமன் அபிமன்னன் இருவருடைய தேர்களுக்கும் நடுவே குறுக்காகக் கிடக்குமாறு போட்டு விட்டான். சூழ்ச்சியின் முதல்படி நிறைவேறி விட்டது. வியூகத்தின் உட்புறம் இருந்தவர்களை அநேகமாக வென்று முடித்திருந்தான் அபிமன்னன். இனியும்