பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

அறத்தின் குரல்

துரியோதனாதியரிடமிருந்து திரும்பிச் சென்றிருந்த கடோற்கசனும் அங்கே போய்ச் சேர்ந்தான். ஏறக்குறையப் பொழுது விடிந்து பதினான்காம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்து விட்டது. போர் ஏற்பாடுகள் நிகழலாயின.

7. பொழுது புலர்ந்தது

பதினான்காம் நாள் வைகறை பொழுது மட்டுமா அன்றைக்குப் புலர்ந்தது? அர்ச்சுனனுடைய சபதம் நிறைவேற வேண்டிய ஒரு நல்ல 2 நிமித்தமும் பொழுதோடு சேர்ந்து தான் புலர்ந்தது. அர்ச்சுனன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்ற முடியுமோ, முடியாதோ, என்று தருமருடைய உள்ளத்தில் ஒரு சந்தேகமும் புலர்ந்தது. எல்லாவிதமான எண்ணங்களுக்கான முடிவும் அன்று மாலைக்குள் புலர்ந்து தானே ஆக வேண்டும்? போர் முரசங்கள் பேரொலி செய்து இருதரப்புப் படைகளையும் போருக்கு அழைத்தன. போர் தொடங்க வேண்டிய நேரத்தில் இருபக்கத்துப் படைகளும் களத்தில் எதிரெதிரே கூடிவிட்டன. சயத்திரதன் அர்ச்சுனன் கையில் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக அவனை நடுவில் நிறுத்திச் சுற்றிலும் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால் வகைப் படைகளையும் நிறுத்திவிட்டார் துரோணர். வீரமும் வல்லமையும் மிகுந்த பல அரசர்களைத் துரோணர் சயத்ரதனைச் சுற்றி ஆயுத பாணிகளாக நிறுத்தி வைத்தார். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட அரசர்களுக்குத் தலைவனாக முதல் நாள் இரவு சபதம் செய்தவர்களுள் ஒருவனான துன்மருஷ்ணன் என்பவன் நிறுத்தப்பட்டான். அர்ச்சுனன் சத்திரதனை நெருங்கக்கூட முடியாது என்று பிரமிக்கும்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவு வன்மையாக இருந்தன. விற்போரில் வல்ல வில்லாளர்களை ஒன்று திரட்டிப் படைகளுக்கு முன்னால் நிற்கச் செய்தார்கள்.