பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
455
 

அவர்கள் மனம் தளர்ந்து தோற்றுப் பின்வாங்கினர். சயத்திரதன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் பாசப்படை என்று ஓர் படைப்பிரிவைச் சேர்ந்த படை வீரர்கள் அவனைச் சுற்றிக் கயிறு பிணித்தது போலப் பிணித்துக் கொண்டு நெருங்கி நின்றனர். அர்ச்சுனனுடைய தேர் அந்தப் பாசப்படை வீரர்களுக்கு முன்னால் போய் நின்றது. நின்ற அளவில் அவனுக்கும் அந்த வீரர்களுக்கும் போர் உண்டாயிற்று. போர் செய்து கொண்டே மெல்ல அவனுடைய தேர் உள்ளே சென்றது. உட்புறம் கர்ணன் தன்னைச் சேர்ந்தவர்களோடு முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அர்ச்சுனனுடைய தேர் நுழைவதைப் பார்த்ததுமே கர்ணன் போருக்குத் தயாராகி விட்டான். உடனே அர்ச்சுனன், முன்பு துரோணருக்கு முன்னால் போர் செய்யும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு வந்தது போல் இங்கும் செய்ய வேண்டாம். இங்கே கர்ணனோடு நான் அதிக நேரம் போர் செய்ய ஆசைப்படுகிறேன்” என்று கண்ணனிடம் காதோடு காது வைத்தாற்போல் இரகசியமாகக் கூறினான். “உன் விருப்பம் அதுவானால் அப்படியே செய்யலாம்” என்று அதற்கு இணங்கினான் கண்ணன்.

கர்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நிகழ்ந்தது. ஆனால் அர்ச்சுனன் ஆசைப்பட்டது போலக் கர்ணனோடு நீண்ட நேரம் போர் செய்வதற்கு முடியாமல் போயிற்று. காரணம்? அவன் மிக விரைவிலேயே தோற்று ஓடிப் போனான். கர்ணன் தோற்றோடிய பிறகு வருணராஜன் புதல்வனான கதாயு என்ற வீரமன்னனுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் ஏற்பட்டது. சுதாயுவுக்குக் கருங்கல்லைப் போல இறுகிய பலமான உடல் வாய்த்திருந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்றுகூட அவன் உடலில் தைக்கவில்லை. எல்லா அம்புகளும் முறிந்து முறிந்து விழுந்தன. பல நூறு அம்புகளை ஒரே சமயத்தில் பாய்ச்சக்கூடிய மிகப்பெரிய வில் ஒன்றை வளைத்துச் சுதாயு மேல் அம்புகளைக் கொட்டினான் அர்ச்சுனன். ஆனால் சுதாயு அவற்றையும் தடுத்து விட்டான்.